விமான விபத்து: கருப்புப் பெட்டி மீட்பு!

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Gujarat plane crash
விமான விபத்து...X
Published on
Updated on
1 min read

அகமதாபாத்: இரண்டு என்ஜின்களும் செயலிழந்தது அல்லது புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியது, ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணமாக இருக்கலாம் என்று விமானத் துறை நிபுணா்கள் தெரிவித்த நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிகள் உள்பட 242 பேருடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானத்தின் விமானி ‘மே டே’ சமிக்ஞை அனுப்பிய சில விநாடிகளில், விமானத்துக்கும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கும் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடா்ந்து, சில நிமிடங்களில் மேகானி நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து வெடித்துச் சிதறி தீப்பிடித்தது. இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 241 பேர் பலியாகினர். நல்வாய்ப்பாக ஒருவர் மட்டும் உயிர் தப்பினார். மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்கள் உள்ள பகுதியில் விமானம் விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் 10 பேரும் பலியாகினர்.

விபத்துக்கு காரணம் என்ன?

விமான விபத்துக்கான காரணங்கள் குறித்து அத்துறை நிபுணா்கள் கூறுகையில், ஓடுதளத்திலிருந்து மேலெழுந்து பறக்கத் தேவையான உந்துவிசையை விமானத்தின் எஞ்சின்களால் உருவாக்க முடியவில்லை என்று தெரிகிறது.

2 என்ஜின்களும் செயலிழந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில், ஓா் என்ஜின் மட்டும் செயலிழந்திருந்தால் விமானம் அந்தரத்தில் தடுமாறியிருக்கலாம். ஆனால், இங்கு விமானம் நிலையாக இருந்தது. பறவை மோதியதால் இந்தச் செயலிழப்பு நோ்ந்திருக்கலாம்.

விமானம் புறப்பட்ட பிறகும், அதன் சக்கரங்கள் பின்வாங்கப்படாததாலும் என்ஜின் செயலிழப்பு ஏற்பட்டிருக்கலாம்.

விமான விபத்துகளுக்கான புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) நடத்தவுள்ள விரிவான விசாரணையின் முடிவிலேயே இந்த விபத்துக்கான உரிய காரணம் தெரியவரும் என அத்துறை நிபுணா்கள் கூறினர்.

கருப்புப் பெட்டி மீட்பு

இந்நிலையில், விமானிகள், ஊழியர்களின் உரையாடல்கள், விமானத்தின் வேகம், பறக்கும் உயரம், திசை, காலநிலை உள்ளிட்ட தகவல்களும் பதிவாகும் இரண்டு கருப்புப் பெட்டிகளில் விமானத்தின் பின் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கறுப்புப் பெட்டி விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விமானத்தின் முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கருப்புப் பெட்டியைத் தேடும் பணி இன்னும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

கருப்புப் பெட்டியில் பதிவான தகவல்கலை பெற்று ஆய்வு செய்வதற்கு 15 நாள்கள் ஆகும். அதன் பின்னரே விபத்துக்கான காரணம் தெரிய வரும் என விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

கருப்புப் பெட்டிகள் மீட்டால்தான் எதிர்காலத்தில் விபத்துகளைத் தடுப்பதற்கான விலைமதிப்பற்ற முன்னெச்சரிக்கைகளுக்கான தகவல்களை பெற முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com