ஊழலை விட மதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது: தொல். திருமாவளவன்

ஊழலை விட மதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது என விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன்
விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன்
Published on
Updated on
3 min read

திருச்சி: ஊழலை விட மதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது என விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

திருச்சியில் வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

திருச்சி அண்ணா ஸ்டேடியம் அருகே சனிக்கிழமை(ஜூன் 14) மாலை 4 மணியளவில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் மதசார்பின்மை காப்போம் பேரணி தொடங்குகிறது.

பேரணி டிவிஎஸ் ரவுண்டானா, மகாத்மாகாந்தி சிலை, பெரும்பிடுகு முத்திரையர் சிலை ஆகியவற்றை கடந்து மாநகராட்சி அலுவலகம் அருகே பேரணி முடிவடைகிறது. தமிழக முழுவதிலிருந்து முன்னணி பொறுப்பாளர்கள் பல்லாயிரகணக்கானோர் பேரணி பங்கேற்கின்றனர்.

மதசார்பின்மை கோட்பாட்டிற்கு எதிரான யுத்தம்

அகில இந்திய அளவில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு கோட்பாட்டை காக்க வேண்டும் என்று அரை கூவல் விடுவதற்கான பேரணி தான் இந்த பேரணி. ஆர்எஸ்எஸ் போன்ற மதசார்பின்மை கோட்பாட்டிற்கு எதிரான யுத்தம் தான் இந்தப் பேரணி. அரசு அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்தப் பேரணி நடைபெறுகிறது.

வெறுப்பு அரசியல்

சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை மத்திய பாஜக அரசு கையாளுகின்றனர். இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளார்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கான நலம் என்ற பெயரில் இந்துக்களை அணி திரட்டுவதற்காக அரசியல் செய்து வருகிறது.

சிறுபான்மையினருக்கு எதிராக ஆட்சி அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர். சட்டத்தின் பெயரால் ஜனநாயகத்தின் பெயரால் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றனர். முத்தலாக், வஃக்பு திருத்தச் சட்டம் மதச்சார்பின்மைக்கு, அரசமைப்புக்கு எதிரானது.

வன்முறைகளை கட்டவிழ்த்து வருகின்றன

இந்தியாவில் பிற மாநிலங்களில் ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனதா, சங்பரிவார் அமைப்புகள் மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியலை பரப்பி இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து வருகின்றனர்.

மசூதிகளை தகர்ப்பது தேவாலயங்களை தகர்த்தது பைபிள் குர்ஆன் போன்ற மத நம்பிக்கையாளர்களின் புனித நூல்களை எரிப்பது, மாட்டுக் கறி சாப்பிடுகிறார்கள் என்ற பெயரில் படுகொலைகளை செய்வது போன்ற கலாசாரம் மதத்தின் பெயரால் திட்டமிட்டு வளர்க்கப்பட்டுள்ளது.

இந்து மதத்தில் உள்ள நம்பிக்கைகளை மதிக்க வேண்டும், அனைத்து மதத்தின் நம்பிக்கைகளை மதிக்க வேண்டும் என்பது கோட்பாடு சட்டத்தின் வரைமுறை.

குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துவது தான் விடுதலைச் சிறுத்தை கட்சி பேரணி நோக்கமாகும்.

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது

அந்நிய முதலீடுகளை கொண்டு வந்து குவிப்பதற்காக அங்குள்ள இயற்கை வளம், கனிம வளம் உள்ளிட்ட இயற்கை வளங்கள் அனைத்தையும் சுரண்டுவதற்கு ஏதுவாக அரசமைப்புச் சட்டம் எண் 370 நீக்கம் செய்தார்கள். இது இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கை அதனால் அது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

மதச்சார்பின்மைக்கு எதிரானது

மத்திய அரசு எந்த மதத்தின் சொத்து நிர்வாகத்திலும் தலையிடாத போது இஸ்லாமியர்களின் சொத்து நிர்வாகத்தை மட்டும் வெளிப்படையாக தலையீடு செய்வது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது மதச்சார்பின்மைக்கு எதிரானது.

முருக பக்தர்கள் மாநாடு

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டார்கள். மக்களை மதத்தின் பெயரால் பிளவு படுத்தி அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றுக்கு இடம் தராத ஒரு பக்குவப்படுத்தப்பட்ட மண்ணாக தமிழ் மண் தமிழ் நாடு இருந்து வருகிறது. ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டை அவர்களது இலக்காக வேண்டி மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துவதற்காக முருகவேல் யாத்திரை, முருக பக்தர்கள் மாநாடு போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மதத்தின் பெயரால் வன்முறை வேண்டாம் மதத்தின் பெயரால் சமூகப் பிரிவினை வாதம் வேண்டாம் என்று வலியுறுத்துவதற்காக அகில இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் எல்லாம் பேரணியில் திரள வேண்டும் என அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

எப்படி ஆறுதல் சொல்வது

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏற்பட்டுள்ள விமான விபத்தில் ஒருவர் மட்டுமே பிழைத்திருக்கிறார் இரண்டு விமானிகள், விமான பணியாளர்க உள்பட 241 பேரும் முற்றாக கருகி இறந்துள்ளனர். எப்படி ஆறுதல் சொல்வது என தெரியவில்லை.

டாட்டா நிறுவனம் தலா ஒரு கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. எத்தனை கோடி கொடுத்தாலும் சரி செய்ய முடியாது இழப்பு, சகித்துக் கொள்ள முடியாதவை. கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும்.

பேரணிக்காக, மூன்று மருவத்துவக் குழுக்கள், 300 தன்னார்வ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரணி தேர்தலை மையப்படுத்தி நடத்தப்படவில்லை, ஏற்கனவே திட்டமிடப்பட்டது.

வஃக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது இந்த பேரணி குறித்து முடிவு செய்யப்பட்டது. ஆனால், பாஜக தேர்தலுக்காக முருகா பக்தர்கள் மாநாடு நடத்துகிறது.

கூட்டணி கட்சிகளுக்கும் பொறுப்புகள் உள்ளது

நிபந்தனை அரசியலை கூட்டணிக்குள் செய்யக்கூடாது. எதிர்பார்ப்பு என்பது எல்லா தேர்தலிலும் உள்ளது. கூட்டணியில் நலம் முதன்மையானது. திமுகவுக்கு எப்படி கூட்டணி பொறுப்புகள் உள்ளதோ அதேபோல கூட்டணி கட்சிகளுக்கும் பொறுப்புகள் உள்ளது.

கூட்டணி ஆட்சிக்கான காலம் இதுவல்ல

கூட்டணி ஆட்சி என்பதை நெடுங்காலத்திற்கு முன்பு நிலைப்பாடாகக் கொண்டிருக்கிறோம், கோரிக்கையாக வெளிப்படுத்தி இருக்கும். இன்றைக்கும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதற்கான காலம் இது இல்லை.

கூட்டணியில் சலசலப்பு ஏற்படுத்த பார்க்கின்றனர்

மாயத் தோற்றத்தை ஏற்படுத்த பார்க்கின்றார்கள். திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்படுத்த பார்க்கின்றனர். அதிமுக கூட்டணியில் உள்ளவர்களே வெளியே உள்ளார்கள், அவர்களையே உள்ளே இணைக்கவில்லை. ஆனால் மத்திய அமைச்சர் அமித் ஷா கூட்டணிக்காக இரண்டாவது முறை தமிழகம் வந்து சென்றுவிட்டார்.

கூட்டணிக்கு தயாராக இல்லை

கூட்டணிக்கு தயாராக இல்லை. அதிமுக இன்னும் வடிவம் பெறவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. அண்ணாமலை இல்லாமல் தேர்தல் நடப்பது அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை. இரண்டு கட்சிகள் ஒன்று சேர்ந்து மற்ற கட்சிகளையும் இணைத்து தேர்தலை சந்திக்கக் கூடாது என அவர் நினைக்கிறார். நாங்கள் சமமான வலிமை பெரும் வரை இதுபோன்ற நிபதனைகளை கூற முடியாது.

திமுக தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. தமிழ்நாட்டில் மட்டும் மல்ல, தேசிய அளவில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. வரும் தேர்தலுக்கு பின்னராவது தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடுவது குறித்து திமுக தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தற்காலிகமாக மூடுதல் என்பது தற்காலிகமான நிலைப்பாடு. அவற்றில் உடன்பாடில்லை. காங்கிரஸ் மது விலக்கு கொள்கையை தீவிரமாக கையில் எடுக்க வேண்டும். இதனால் இளம்தலைமுறையினரின் ஆற்றல் சிதைகிறது.

அண்ணாமலை எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை

எங்கெல்லாம் அரசு இருக்கிறதோ அங்கு ஊழல் இருக்கிறது. ஊழல் என்பதை சொல்லி ஆட்சியில் இருந்து அகற்றப்படுவது என்பது சொற்பமான நிகழ்வுகள் தான்.

அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினாலும் இதுவரை எந்த ஆதாரமும் வெளியிடவில்லை. அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் மக்கள் முன் வைக்கட்டும், விசாரணைக்கு கொண்டு செல்லட்டும் என்றார்.

மேலும், ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது என திருமாவளன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com