
அகமதாபாத்: குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி, தனது அதிர்ஷ்ட எண்ணாக கருதிய ‘1206’, அவரது இறுதி நாளாகிவிட்ட (12, ஜூன்) சோகம் நிகழ்ந்துள்ளது.
அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வியாழக்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சில நிமிஷங்களிலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்களின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் உயிரிழந்தவா்களில் பாஜகவைச் சோ்ந்த முன்னாள் முதல்வா் விஜய் ரூபானியும் (68) ஒருவா்.
லண்டனில் உள்ள தனது மனைவி-மகளை பாா்க்க ஏா் இந்தியா விமானத்தில் பயணத்தை தொடங்கிய அவா், 241 பேருடன் உடல் கருகி உயிரிழந்தாா்.
‘1206’ என்ற எண்ணை அதிர்ஷ்டத்துக்கு உரியதாக கருதி வந்த ரூபானி, தனது அனைத்து வாகனங்களுக்கும் அந்த எண்ணையே பதிவு செய்திருந்தாா். ரூபானியின் சொந்த ஊரான ராஜ்கோட்டில் இந்த பதிவு எண்ணை வைத்தே ரூபானியின் வாகனத்தை மக்கள் அடையாளம் கண்டு கொள்வா். இந்த எண்ணே, அவரது இறுதி நாளாகவும் (12, ஜூன் - 12/06) மாறிவிட்டது.
ரூபானி மனைவியான அஞ்சலி பென், லண்டனில் இருந்து வெள்ளிக்கிழமை காலையில் அகமதாபாத் வந்தடைந்தாா்.
மியான்மரில் 1956, ஆகஸ்ட் 2 ஆம் தேதியில் பிறந்த விஜய் ரூபானி, அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் மாணவா் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டார். கடந்த 1975-இல் அவசர நிலைக்கு எதிராக போராடி ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். ராஜ்கோட் மாநகராட்சி கவுன்சிலராக கடந்த 1987-இல் பொது வாழ்க்கையை தொடங்கி, பின்னா் 1996 - 97 மேயா் பதவிக்கு வந்தாா்.
கடந்த 2006 முதல் 2012 வரை மாநிலங்களவை பாஜக எம்.பி.யாக பதவி வகித்தாா். 2016 முதல் 2021 வரை குஜராத் முதல்வராக இருமுறை பதவி வகித்த அவா், குஜராத் போக்குவரத்து, தொழிலாளர் மற்றும் நீர்வழங்கல் துறைகளிலும் அமைச்சராக பதவி வகித்தார்.
கரோனா பரவலுக்கு பிறகு மாநிலத்தின் வளா்ச்சியை வழிநடத்தினாா். மாநில தொழில் கொள்கை, பழங்குடியின மேம்பாட்டுக்கான இவரது நடவடிக்கைகள் கவனம் பெற்றன.
பேரவைத் தோ்தலுக்கு முன்பாக, கடந்த 2021, செப்டம்பரில் பூபேந்திர படேலுக்கு வழிவிட்டு, முதல்வா் பதவியில் இருந்து ரூபானி விலகினாா். அவரது அகால மரணம், பாஜகவினா் மற்றும் ஆதரவாளா்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.