
கரூர்: கரூரில் காவல்துறையினரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரௌடி பென்சில் தமிழழகனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் பென்சில் தமிழழகன் (30). இவரது கூட்டாளிகளான வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ் ஆகிய 4 பேரும் சேர்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு லைட் ஹவுஸ் கார்னர் பேருந்து நிறுத்தம் அருகில் பேருந்துக்காக காத்திருந்த பயணி ஒருவரிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், அந்த அப்பாவி பயணியை கொலை வெறியோடு தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து அந்த பயணி கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், புதன்கிழமை மாலை பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கரூர் கிளை சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை முயற்சி வழக்கில் தப்பியோடிய ரௌடி பென்சில் தமிழழகனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், புதன்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை அரிக்காரம்பாளையம் மேம்பாலம் அருகில் பிடிபட்டுள்ளார். அப்போது பென்சில் தமிழழகன் போலீசாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது, கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தனது துப்பாக்கியால் வலது கால் முட்டிக்கு கீழ் பகுதியில் சுட்டுப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து ரௌடி தமிழழகன் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட பிரபல ரௌடி பென்சில் தமிழழகன் மீது கொலை, வழிப்பறி, அடிதடி என பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. பயணி ஒருவரை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலைவெறியோடு தாக்கிய பிரபல ரௌடி கரூர் பகுதியில் சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.