பறக்க அனுமதி கேட்காதீர்! சசி தரூரின் சர்ச்சைக்குள்ளாகும் பதிவு!

பறக்க அனுமதி கேட்காதீர்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பதிவிட்டுள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 Shashi Tharoor, Kharge
மல்லிகார்ஜுன கார்கே / சசி தரூர் கோப்புப் படங்கள்
Published on
Updated on
1 min read

பறக்க அனுமதி கேட்காதீர்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பதிவிட்டுள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து சசி தரூர் பேசியதை மல்லிகார்ஜுன கார்கே பொதுவெளியில் விமர்சித்திருந்த நிலையில், சசி தரூர் இவ்வாறு பதிவிட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் பிரசாரத்திற்காக வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்துக் கட்சிக் குழுவிற்கு சசி தரூர் தலைமை தாங்கினார்.

இந்தியா திரும்பிய பிறகு, அவர் மற்ற தூதுக்குழு உறுப்பினர்களுடன் ஜூன் 11 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இது குறித்துப் பேசியபோது இந்தியாவின் சொத்து பிரதமர் மோடி எனக் குறிப்பிட்டிருந்தார். அவரின் இத்தகைய பேச்சு, காங்கிரஸ் தலைவர்களிடையே மாறுபட்ட கருத்துகளை உருவாக்கியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியைப் புகழும்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை ஒருபடி தாழ்த்துவதைப் போல உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்களில் பேச்சுகள் நிலவுகின்றன.

சசி தரூரின் கருத்து குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூரின் மொழி நன்றாக இருக்கிறது. அதனால்தான் அவர் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அங்கம் வகிக்கிறார். நாம் ஒரே குரலில் பேசுகிறோம். நாம் நமது நாட்டுக்காக ஒற்றுமையுடன் நிற்கிறோம். ஆபரேஷன் சிந்தூரின்போதும் நாம் ஒற்றுமையாகவே இருந்தோம். நாடுதான் முக்கியம் என நாங்கள் சொல்கிறோம்; ஆனால், சிலர் பிரதமர் நரேந்திர மோடியே முதன்மை எனக் கூறுகின்றனர். அதன் பிறகே அவர்களுக்கு நாடு முக்கியமாகிறது. எனவே, நாம் என்ன செய்ய வேண்டும்? எனக் கூறியிருந்தார்.

கார்கேவின் இந்தப் பேச்சுக்குப் பிறகு, சசி தரூர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பறப்பதற்கு அனுமதி கேட்காதீர்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பறவையின் படத்தைப் பகிர்ந்து, பறப்பதற்கான அனுமதி கேட்காதீர்கள். சிறகுகள் உங்களுடையது. வானம் யாருக்கும் சொந்தமானதல்ல எனப் பதிவிட்டுள்ளார்.

சசி தரூரின் இத்தகைய பதிவு, காங்கிரஸ் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க | அவசரநிலை 50 ஆண்டுகள் நிறைவு! மத்திய அமைச்சரவை தீர்மானம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com