சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது!

வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை வனத்துறையின் கூண்டில் சிக்கியது.
வனத்துறையின் கூண்டில் சிக்கிய சிறுத்தை
வனத்துறையின் கூண்டில் சிக்கிய சிறுத்தை
Published on
Updated on
2 min read

வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை வனத்துறையின் கூண்டில் சிக்கியது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட் தெற்கு டிவிஷனில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு அமைந்து உள்ளது. இந்த குடியிருப்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோன் முண்டா - மோனிகா தேவி தம்பதியினர் தனது 2 குழந்தைகளுடன் தங்கி இருந்து தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில், மோனிகாதேவி வீட்டின் பின்புறம் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டு இருந்தார். அவரது மூத்த மகள் ரோஷினி குமாரி (6) உடனிருந்தார். மோனிகாகுமாரி தண்ணீர் குடத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார். குடிநீர் குழாய் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ரோஷினி குமாரியை சிறுத்தை தாக்கி கவ்விச் சென்றது. அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பதறியபடி மோனிகாதேவி ஓடி வந்தார்.

குடியிருப்புக்கு முன் கடந்த வெள்ளிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்த ரோஷினிகுமாரி (6) என்ற சிறுமியை சிறுத்தை தாக்கி கவ்விச் சென்றதை கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுமியை தேடினர்.

இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், போலீஸார் மற்றும் எஸ்டேட் நிர்வாகத்தினர் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் சிறுமி அணிந்து இருந்த ஆடை ரத்தக் கறையுடன் தேயிலை தோட்ட பகுதியில் கிடந்தது. அன்று இரவு 3 மணி வரை தேடியும் சிறுமியின் உடல் கிடைக்கவில்லை. போதிய வெளிச்சம் இல்லாததால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. மீண்டும் காலை தேடுதல் பணி தொடங்கியது.

தேடுதல் பணியில் பைரவா, வீரா ஆகிய இரு மோப்ப நாய்கள் மற்றும் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

தேயிலை தோட்டத்தில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுமியின் உடல் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் பாதி உடலில் தலை மற்றும் ஒரு வலது கால் மட்டுமே இருந்தது. மீட்கப்பட்ட உடல் உடற்கூறாய்வுக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவித் தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் வனத் துறை சாா்பில் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவை பொருத்தவும், சிறுத்தையை பிடிக்க 2 கூண்டு வைத்தனர்.

இந்நிலையில், ​​சோலைப் பகுதிக்கும் தொழிலாளர் இல்லத்திற்கும் நடுவில், சோலையில் இருந்து வெளியே 50 மீட்டர் தொலைவில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுமியை கொன்ற சிறுத்தை வியாழகிழமை அதிகாலை 5 மணிக்கு சிக்கியது. பிடிபட்ட சிறுத்தையை லாரி மூலம் கொண்டுச் சென்று அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். சிறுத்தை சிக்கியதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ​

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஊசிமலை எஸ்டேட் பகுதியில் பணி புரிந்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அனில் அன்சாரி மகள் அப்சரா (6) சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். கடந்த 9 மாதங்களில் இரு சிறுமிகளை சிறுத்தை தாக்கி கொன்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com