ஆகாஷ் ஆனந்துடன் மாயாவதி
ஆகாஷ் ஆனந்துடன் மாயாவதி

மருமகன் ஆகாஷ் ஆனந்த் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: மாயாவதி

மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும், அவர் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம்
Published on

லக்னௌ: மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும், அவர் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் உயர்மட்ட கூட்டத்துக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

கட்சியை வலுப்படுத்துவது குறித்து நாடு முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகளுடனான உயர்மட்டக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் முடிவில் பேசிய மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சி மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் முன்னேற்றத்திற்கும் அவசியம் என்று வலியுறுத்தினார்.

பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் ஸ்ரீ கன்ஷி ராம், தான் உயிருடன் இருக்கும் வரை கட்சியில் தனது வாரிசை அறிவிக்கப் போவதில்லை என்றும் தனக்கு கட்சியும் இயக்கமும் உயர்ந்தது. உறவுகள் பின்னர் வரலாம் என்றார். மேலும் குடும்ப உறுப்பினர்கள் கட்சியில் பணியாற்றுவதை அவர் எதிர்க்கவில்லை என்றாலும், அவர்களில் யாராவது தனது பெயரை தவறாகப் பயன்படுத்தி கட்சிக்கோ இயக்கத்திற்கோ தவறு இழைத்தால், அவர்களை உடனடியாக நீக்கப்படுவார் என்பதில் அவர் தெளிவாக இருந்தார் என்று கூறினார்.

அவரது கொள்கையின்படி, கட்சியில் கோஷ்டி பூசல், கட்சி விரோத நடவடிக்கைகள் மற்றும் ஆகாஷ் ஆனந்தின் அரசியல் வாழ்க்கையையும் தடம் புரளச் செய்த அவரது மாமனார் அசோக் சித்தார்த்தை கட்சியிலிருந்து கடந்த மாதம் நீக்கப்பட்ட நிலையில், மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும், அவர் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாககவும், தான் உயிருடன் இருக்கும் வரை கட்சியில் தனது வாரிசை அறிவிக்கப் போவதில்லை என மாயாவதி அறிவித்தார்.

மேலும், நாடு முழுவதும் கட்சியின் செயல்பாடுகளை மேற்பார்வையிட தனது சகோதரரும் கட்சியின் தேசிய துணைத் தலைவருமான ஆனந்த் குமார் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ராம்ஜி கௌதம் ஆகியோர் தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனந்த் குமார் தன்னை ஒருபோதும் ஏமாற்றியதில்லை என்றும் கட்சியின் செயல்பாடுகளுக்கு விசுவாசமாக இருந்து வந்தார் என மாயாவதி நம்பிக்கை தெரிவித்தார்.

2023 டிசம்பர் 10 ஆம் தேதி மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்த மாயாவதி, 2024 மே 7 ஆம் தேதி அத்தகைய முக்கியப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு ‘அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையும் வரை’ கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார். மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தோல்வியடைந்த சில வாரங்களுக்குப் பிறகு, மீண்டும் ஆகாஷ் ஆனந்தை தேசிய ஒருங்கிணைப்பாளராக மாயாவதி நியமித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com