ஹரியாணா காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: கட்சியினரை சந்தேகிக்கும் குடும்பத்தினர்!

ஹரியானாவில் காங்கிரஸ் பெண் தொண்டர் சூட்கேஸில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
ராகுல் காந்தியுடன் ஹிமானி நர்வால்
ராகுல் காந்தியுடன் ஹிமானி நர்வால்
Published on
Updated on
2 min read

ஹரியாணாவில் காங்கிரஸ் பெண் தொண்டரின் சடலம் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவரது கொலைக்கு கட்சியினர் காரணமாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஹரியாணாவின் ரோடாக் மாவட்டத்தில் நேற்று (பிப். 1) சாம்ப்லா பேருந்து நிலையம் அருகே சூட்கேஸில் அடைக்கப்பட்ட அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் அந்தப் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், அது காங்கிரஸ் தொண்டரான ஹிமானி நர்வால் எனத் தெரிய வந்தது.

சாம்ப்லா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹிமானி நர்வால், பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பங்குபெற்றார் என்றும் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றியவர் என்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாரத் பூஷன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஹிமானியின் கொலையில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த அவரது தாய் சவிதா, “பிப்ரவரி 27 அன்று மாலை 4 மணி வரை நான் என் மகளுடன் இருந்தேன். அவள் அன்று மாலை தில்லிக்குக் கிளம்பிச் சென்றாள். இரவு நான் அவளிடம் மீண்டும் பேசினேன்.

மறுநாள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டதால் அவளால் பேச முடியாது என்று என்னிடம் கூறினாள். நான் இரவில் அவளை மீண்டும் அழைத்தபோது, ​​அவளுடைய எண் அணைக்கப்பட்டிருந்தது. மறுநாள் காலையில் நான் அவளை அழைத்தபோது, ​​அது இரண்டு முறை இயக்கப்பட்டு பின்னர் அணைக்கப்பட்டது. பின்னர் அவள் இறந்த செய்தி மட்டுமே கிடைத்தது.

என் மகள் கொலையில் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய ஒருவர் சம்பந்தப்பட்டிப்பதாக நாங்கள் கருதுகிறோம். ராகுல் காந்தியுடனான என் மகளின் யாத்திரைக்குப் பின்னர் அவள் மேல் சிலருக்கு வருத்தம் ஏற்பட்டது. இளம் வயதில் கட்சியில் அவளின் வளர்ச்சி அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தியது.

என் மகள் கொலைக்குப் பின்னர் நான் பூபிந்தர் சிங் ஹூடாவின் (ஹரியாணா முன்னாள் முதல்வர்) மனைவி ஆஷா ஹூடாவை அழைத்தேன். ஆனால், அவர் அழைப்பை ஏற்கவில்லை. அதன்பின், அவர்கள் ஒரு முறை கூட எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை” என்று தெரிவித்தார்.

ஹிமானி நர்வாலின் சகோதரர் ஜதின் கூறுகையில், "எங்கள் காலனியில் பல சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஹிமானியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சூட்கேஸ் எங்கள் வீட்டிலிருந்தது. குற்றவாளி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவராக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் நானும் சில நாட்கள் பங்கேற்றேன்.

அரசு நிர்வாகம் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஒத்துழைக்கவில்லை என்று நினைக்கிறேன். இல்லையென்றால், குற்றவாளிகள் இந்நேரம் பிடிபட்டிருப்பார்கள். ஹிமானி இறப்பிற்குப் பின்னர் இதுவரை காங்கிரஸைச் சேர்ந்த யாரும் எங்களைச் சந்திக்கவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com