
தில்லியில் 15 ஆண்டுகளுக்கு முந்தைய வாகனங்களைக் கண்டறிய செய்யறிவு (ஏஐ) கேமராக்களைப் பயன்படுத்த தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
தில்லியில் வரும் ஏப்ரம் மாதம் முதல் 15 ஆண்டுகள் ஆன வாகனங்களுக்கு எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல், டீசல் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எரிபொருள் நிலையங்களில் பழைய வாகனங்களைக் கண்டறிவது எப்படி? நடைமுறையில் இந்த அறிவிப்பு சாத்தியமா? என்ற சந்தேகம் பலரிடையே எழுந்தது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் தில்லி நிர்வாகம் பதில் அளித்துள்ளது. இது குறித்து பேசிய சுற்றுசூழல் நலத் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்ஷா,
''பெட்ரோல் நிலையங்களில் நவீன கருவிகளை நிருவி 15 ஆண்டுகளுக்கும் மேல் இயக்கப்படும் பழைய வாகனங்களைக் கண்டறிந்து, அவ்வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்குவதை நிறுத்தவுள்ளோம்.
பெட்ரோல் நிலையங்களில் செய்யறிவு (ஏஐ) கேமராக்களை பொருத்துவதன் மூலம், உணர்திறன் கருவிகள் (சென்சார்) பழைய வாகனங்களைக் கண்டறிந்து பெட்ரோல் நிரப்பாது. தில்லி பெட்ரோல் நிலையங்களில் ஏற்கெனவே செய்யறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், அவை தற்போது மாசு கட்டுப்பாட்டிற்குள் அந்த வாகனம் உள்ளதா? என்பதை மட்டுமே கண்டறியும். தற்போது 15 ஆண்டுகள் ஆன வாகனங்களைக் கண்டறியும் வகையில் இவை மேம்படுத்தப்படவுள்ளன. பெட்ரோல் நிலையங்களில் தற்போது அந்த வசதி இல்லை. விரைவில் பெட்ரோல் நிலையங்கள் மேம்படுத்தப்படும்'' எனக் குறிப்பிட்டார்.
தில்லியில் கிட்டத்தட்ட 500 பெட்ரோல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகளில் முதல்கட்டமாக முக்கிய பெட்ரோல் நிலையங்கள் மேம்படுத்தப்படவுள்ளன.
காற்று மாசு ஏற்படுவதைக் குறைக்கும் வகையில் தில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2025 டிசம்பருக்குள் கிட்டத்தட்ட 90% பேருந்துகளை சிஎன்ஜி மூலம் இயக்கத் திட்டமிட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்குள் 8,000 மின்சாரப் பேருந்துகள் உள்பட 11,000 பேருந்துகளை வாங்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
தில்லியில் ஏற்பட்டுவரும் காற்று மாசுபாட்டிற்கு 15 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்கள் இயங்குவதுதான் காரணம் என்ற எந்தவித அதிகாரப்பூர்வ ஆய்வுகளும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... ஊருக்குள் இன்னும் எத்தனை ஞானசேகரன்கள்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.