குற்றம்சாட்டப்பட்ட 40 எதிராளிகள் மீது நீதிமன்ற விசாரணை! ஆதரவாளர்கள் போராட்டம்!

துனிசியாவில் 40 எதிர்க்கட்சியினர் மீது நீதிமன்ற விசாரணை நடத்தப்படுவதைப் பற்றி...
கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்கக் கோரி போராடும் மக்கள்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்கக் கோரி போராடும் மக்கள்.
Published on
Updated on
1 min read

வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் முக்கிய எதிர்க்கட்சி நிர்வாகிகள் உள்பட 40 பேர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

துனிசியா நாட்டு அரசுக்கு எதிராக சதி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய எதிர்க்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 40 பேரின் மீதான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் நேற்று (மார்ச் 4) விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கானது ஆதாரமற்றது எனவும் அரசியல் நோக்கங்களினால் பொய்யாக சித்தரிக்கப்பட்டதாகவும் கூறி ஏராளமான ஆர்வலர்கள் அந்த நீதிமன்றத்தின் வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வழக்கில் எதிர்க்கட்சி நிர்வாகிகள், முன்னாள் அதிகாரிகள், தொழில் தலைவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட 40 பேரின் மீது நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக சதி செய்ததாகவும், அதில் சிலர் பயங்கரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், சிலர் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் கட்சியினருடன் தொடர்பிலிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அவர்களில் சிலர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக்கு முந்தைய காவலில் உள்ள நிலையில் மற்றவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒன்பது பேர் மிகவும் ஆபத்தானவர்கள் என்று குறிப்பிடப்பட்டு காவலில் இருந்து விடுவிக்கவும் விசாரணைக்கு ஆஜராகவும் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்படவில்லை.

இதையும் படிக்க: அமெரிக்காவுடன் வர்த்தகப் போருக்கு தயாராகும் சீனா?

கடந்த ஆண்டு (2024) 2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட துனிசியா அதிபர் கைஸ் சயீத்தை, அந்த 40 பேரும் 2021 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பை நடத்தியதற்காகக் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், அவர்களை அதிபர் கைஸ் ‘துரோகிகள் மற்றும் தீவிரவாதிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், அதிபரின் விமர்சகர்கள் இந்த வழக்கின் ஆதாரங்கள் அனைத்தும் சித்தரிக்கப்பட்டு அரசியல் நோக்கத்துடன் நடைபெறுவதாகக் கூறியுள்ளனர்.

முன்னதாக, அரபு வசந்த ஜனநாயக ஆதரவு எழுச்சிகளின் பிறப்பிடமான துனிசியாவில் அதிபர் சயீத்தின் ஆட்சியில் மக்களின் சுதந்திரமனாது குறிப்பிடத்தக்க அளவில் பின்னடைவைக் கண்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களவையைக் கலைத்து நிர்வாக அதிகாரத்தை விரிவுபடுத்தியப் பிறகு, சயீத்தின் அரசு நீதித்துறையைப் பயன்படுத்தி அவரது எதிர்ப்பை அடக்குவதாக ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இருப்பினும், அதிபர் சயீத்தின் ஆதரவாளர்கள் அவரது நடவடிக்கைகள் அனைத்தும் விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் ஊழல் ஆகியவற்றிலிருந்து நாட்டை மீட்டு நிலைநிறுத்த அத்தியாவசியமானது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், சர்வதேச அளவிலான மனித உரிமை அமைப்புகள் இந்த வழக்கிற்கு தொடர்ந்து கண்டம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com