பாகிஸ்தான்: 10 தீவிரவாதிகள் கைது! பயங்கரவாத சதி முறியடிப்பு!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினரால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) எனும் அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்நாட்டின் பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் 73 நடவடிக்கைகள் மேற்கொள்ள்ப்பட்டன. இதன் மூலம், குஷாப் மற்றும் ராவல்பிண்டி ஆகிய பகுதிகளிலிருந்து மிகவும் ஆபத்தான தீவிரவாதிகள் என அறியப்பட்ட ரியாஸ் மற்றும் ரஷீத் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த தீவிரவாதிகளிடம் இருந்து 2.69 கிலோ அளவிலான வெடி பொருள், தடைசெய்யப்பட்ட புத்தகம், ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடி குண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதையும் படிக்க: மியான்மரின் பொது தேர்தல் எப்போது? ராணுவ அரசு அறிவிப்பு!
இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் லாஹூரிலுள்ள முக்கியக் கட்டடங்களை தகர்க்க அவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டதின் மூலம் மிகப்பெரிய அளவிலான நாசக்கார தாக்குதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தானில் பெரும்பாலும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த மார்ச்.1 அன்று பஞ்சாப் மாகாணத்தில் டி.டி.பி. இயக்கத்தைச் சேர்ந்த சீக்கியர் ஒருவர் உள்பட 20 தீவிரவாதிகளை அந்நாட்டு பாதுக்காப்புப் படையினர் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.