மியான்மரின் பொது தேர்தல் எப்போது? ராணுவ அரசு அறிவிப்பு!
மியான்மர் நாட்டின் பொது தேர்தல்கள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து அந்நாட்டின் ராணுவ அரசின் தலைவர் அறிவித்துள்ளார்.
மியான்மர் நாட்டின் மக்களாட்சியைக் கலைத்து ராணுவ ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், ஜனநாயக முறைப்படி அந்நாட்டின் தேர்தல்கள் இன்னும் 10 மாதங்களில் நடைபெறும் என ராணுவ அரசின் தலைவர் மின் அவுங் ஹ்லைங் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் ராணுவ அரசின் ஆதரவு நாடான பெலாரஸ் நாட்டிற்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ள அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வருகின்ற 2025 டிசம்பரில் அல்லது 2026 ஜனவரி மாதத்தில் மியான்மர் நாட்டின் பொது தேர்தல்கள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: உலகிலேயே முகத்தில் அதிக முடிகள் கொண்ட நபர்! கின்னஸ் சாதனையில் இந்தியர்!
மேலும், இந்த தேர்தலில் போட்டியிட தற்போது வரை அந்நாட்டின் 53 அரசியல் கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இருப்பினும், இந்த தேர்தல் நடைபெறும் தேதிகள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, மியான்மரில் ராணுவத்திற்கும் ஜனநாயக ஆதரவு போராளிகளுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டு போரைத் தொடர்ந்து இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டிலுள்ள சில இனக்குழுக்களும் தன்னாட்சிக் கோரி உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆவுன் சன் சுகியின் ஆட்சியைக் கலைத்து அமைக்கப்பட்ட ராணுவ அரசுக்கு அந்நாட்டு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது அறிவிக்கப்படும் தேர்தலானது ஜனநாயக முறையில் அந்நாட்டில் ராணுவ அரசின் ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சி என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.