இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் நகரத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று (மார்ச் 13) நிகழ்ந்துள்ளது.
நேப்பிள்ஸ் நகரத்தில் இன்று (மார்ச் 13) அதிகாலை 1.25 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த 40 ஆண்டுகளில் இதுதான் அந்நகரத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் நிறுவனம் கூறியதாவது, நிலநடுக்கம் அபாயமுள்ள பகுதியான ஃப்ளெக்ரேயன் வயல்களின் பொஸ்ஸோலி பகுதியில் 3 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிர்வானது பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
இந்நிலையில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போது அம்மாகாணம் முழுவதும் பயங்கர சத்தத்துடன் அபாய ஒலிகள் தொடர்ந்து ஒலித்ததாகவும் சில இடங்களில் பயங்கர அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வெளியான புகைப்படங்களில் அப்பகுதியிலுள்ள சில கட்டடங்கள் இடிந்து கீழே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் மீது விழுந்து சிதைந்திருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்னோலி மாவட்டத்தில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டு வருகின்றனர். இருப்பினும், இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்த தெளிவான தகவல்கள் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.
நிலநடுக்கத்தின் முதல் அதிர்வைத் தொடர்ந்து இரண்டு சிறியளவிலான பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதால், பெரும்பாலான மக்கள் சாலைகளில் தங்களது வாகனங்களில் முகாமிட்டுள்ளனர். மேலும், பின் அதிர்வுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால் பொஸ்ஸோலி, பாக்னோலி மற்றும் பக்கோலி மாவட்ட நிர்வாகத்தினர் அப்பகுதியிலுள்ள பள்ளிக்கூடங்களை மூட உத்தரவிட்டுள்ளனர்.
தற்போது நிலநடுக்கத்தைச் சந்தித்துள்ள நேப்பிள்ஸ் நகரமானது நில அதிர்வு அபாயமுள்ள ஃப்ளெக்ரேயன் வயல்கள் எனும் மிகப் பெரிய அளவிலான எரிமலையின் பெருவாயின் மீது அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 15 நகரங்களை உள்ளடக்கிய இப்பகுதி முழுவதும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 5 லட்சம் மக்கள் வாழும் இப்பகுதியில் பெரும்பாலானோர் அதிக ஆபத்துள்ள சிவப்பு மண்டலம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் வசிப்பதாகக் கணக்கிடப்படுகிறது.
முன்னதாக, இந்த எரிமலை இறுதியாக 486 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 1538 ஆம் ஆண்டு வெடித்தது. இருப்பினும், கடந்த சில காலமாக அப்பகுதியில் அதிகரித்து வரும் நில அதிர்வுகள் அனைத்தும் அந்த எரிமலையினுள் தீக்குழம்புகளின் வெப்பம் அதிகரிப்பதினால்தான் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.