
பிகார் மாநிலத்தின் அராரியா மாவட்டத்திலுள்ள கிராமத்தில் குற்றவாளியைப் பிடிக்க சென்ற காவலர்களை ஊர் மக்கள் தாக்கியதில் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார்.
லக்ஷ்மிபூர் கிராமத்தைச் சேர்ந்த அன்மோல் யாதவ் என்ற குற்றவாளி அக்கிராமத்தில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்றுள்ளதாக ஃபுல்கனா காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, அங்கு சென்ற காவல் துறையினர் அன்மோலை சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது, அங்கிருந்த கிராமவாசிகள் சிலர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை சரமாரியாகத் தாக்கி அந்த குற்றவாளியை விடுவித்து தப்பிக்க வைத்துள்ளனர்.
இதையும் படிக்க: ஹரியாணா உள்ளாட்சித் தோ்தல்: 9 மாநகராட்சிகளைக் கைப்பற்றிய பாஜக
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த காவல் துறை உதவி ஆய்வாளர் ராஜீவ் ரங்கன் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக, அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் இந்த தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பலியான காவலரின் உடல் உடற்கூராய்வு சோதனைக்காக சர்தார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவரது மரணம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.