
இந்திய ரயில்கள் மீதான 7,971 கல்வீச்சு சம்பவங்களில் 4,549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரயில்கள் மீதான கல்வீச்சு சம்பவங்கள் குறித்தும் அதற்கு பின்னாலுள்ள காரணத்தை ஆராய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, மக்களவையில் பாஜக உறுப்பினர் தர்மபுரி அரவிந்த் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய இந்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ், கடந்த 2023,2024 மற்றும் 2025 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் வரை வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்கள் மீது 7,971 கல்வீச்சு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு சம்பவத்தின் மீதும் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த சம்பவங்களில் தொடர்புடைய 4,549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கரோனாவுக்குப் பிறகு பங்குச் சந்தையில் அதிக சரிவு கண்ட நாடுகள்!
இதனைத் தொடர்ந்து, கல்வீச்சு சம்பங்களினால் பாதிப்படைந்த வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களின் பெட்டிகளை சீரமைக்க அனைத்து மண்டல ரயில்வேக்களுக்கும் மொத்தம் ரூ.5.79 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த, ரயில்வே பாதுகாப்புப் படையினர், அரசு ரயில்வே காவல் துறை, மாவட்ட காவல் துறை மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் இணைந்து ரயில்வே தண்டவாளங்களின் அருகிலுள்ள மக்கள் குடியிருப்புகளில் கல்வீச்சு சம்பவங்கள் குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்வீச்சு சம்பவங்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் ரயில்வே பாதுகாப்பில் ஈடுபடும் படைகளின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு அந்த சம்பவங்களை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.