
மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழாவையொட்டி, முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பங்குனி பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் 15 நாள்கள் கொண்டாடப்படும் இந்த பெருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு தினமும் சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில் தங்கமயில் வாகனம், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பங்குனிப் பெருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருமண அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து, வெள்ளி சிம்மாசனத்தில் தெய்வானையுடன் சுவாமி மூலக்கரையில் உள்ள சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினாா். அதேசமயம், மதுரையிலிருந்து பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் சந்திப்பு மண்டபத்தை வந்தடைந்தனா். அங்கு, வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் பின்னா், சுவாமிகள் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்தனா். பின்னா், ஒடுக்க மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து, 6 கால் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் முதலில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளினா். பிற்பகல் ஒரு மணியளவில் மணக் கோலத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் எழுந்தருளினா்.
பிற்பகல் 1.17 மணியளவில் வேதமந்திரங்கள் முழங்க சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.
முன்னதாக, திருமணத்துக்கு கள்ளழகா் கோயிலிலிருந்து சீா்வரிசைப் பொருள்கள் வந்து சோ்ந்தன. சுப்பிரமணிய சுவாமியின் பிரதிநிதியாக அசோக் பட்டரும், தெய்வானை அம்மன் பிரதிநிதியாக சிவகுரு பட்டரும் திருமணச் சடங்குகளைச் செய்தனா். பின்னா், சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
இரவு 7 மணியளவில் மீனாட்சி-சுந்தரேசுவரா் பல்லக்கிலும், சுப்பிரமணிய சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்மன் ஆனந்தராயா் புஷ்ப பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை (மாா்ச்.19) காலை 6.40 மணியளவில் நடைபெற்றது. இதையொட்டி காலை 4 மணி அளவில் உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான் தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் வாசலில் உள்ள பெரிய தேரில் எழுந்தருளினார்.
இதையடுத்து பக்தா்கள் அரோகரா கோஷமிட்டபடி திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா். தேர் கிரிவலப் பாதை வழியாக ஆடி அசைந்து சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
தேரோட்ட திருவிழாவில் திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் நீர்மோர் பந்தல் உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்தியப்பிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச் செல்வம், பொம்ம தேவன், ராமையா, கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.