மார்ச் 28 ஐபிஎல் போட்டி: சென்னை மெட்ரோவின் முக்கிய அறிவிப்பு!

சென்னை சேப்பாக்கத்தில் மார்ச் 28-ல் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ள நிலையில் மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு.
மார்ச் 28 ஐபிஎல் போட்டி: சென்னை மெட்ரோவின் முக்கிய அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

சென்னை சேப்பாக்கத்தில் நாளை மறுநாள்(மார்ச் 28) நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காணச் செல்லும் ரசிகர்கள், தங்கள் டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வருகின்ற மார்ச் 28, 2025 ஆம் தேதி நடைபெறஉள்ள “ஐபிஎல் 2025” கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

ஸ்பான்சர் செய்யப்பட்ட ஐபிஎல் போட்டிகான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் பயணச்சீட்டுகளில் (both Digital & Physical) உள்ள தனித்துவமான க்யூஆர் குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.

இந்த சிறப்புச் சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ ரயிலில் எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம். ​

அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 1 மணிக்கு விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி புறப்படும். பயணிகள் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் (நடைமேடைகள் 1 & 2) வழித்தடம் மாற்றம் செய்துகொள்ளலாம். ஐபிஎல் 2025 போட்டியைக் காணச் செல்பவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

நாளை மறுநாள் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com