தென் அமெரிக்க நாடான பெருவில் வருகிற 2026 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.
பெரு நாட்டில் கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் இரு அவை தேர்தல்நடைமுறையில் இல்லாத நிலையில் வருகின்ற 2026 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் அந்நாட்டின் பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும் என அதிபர் தீனா பொலுவார்த்தே அறிவித்துள்ளார். மேலும், இந்தத் தேர்தலின் மூலம் புதிய அதிபர், 130 பிரதிநிதிகள் மற்றும் 60 செனேட்டர்கள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தேர்தலானது ஜனநாயக முறைப்படி தெளிவாக எந்தவொரு ஒழிவு மறைவுமின்றி நடத்தப்படும் என தேசிய அளவிலான தொலைக்காட்சி அறிவிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டில்லோ தனது ஆட்சியின் 2-வது ஆண்டில் பதவி நீக்கப்பட்ட நிலையில் அவரது பதவிக்காலத்தை நிறைவு செய்வதற்காக தீனா பொலுவார்த்தே அதிபராகப் பதவியேற்று கொண்டார்.
இதனிடையே, இந்த மாதம் அந்நாட்டு மக்களிடையே மேற்கொள்ளப்பட்ட தேசிய அளவிலான கணக்கெடுப்பின்படி 93 சதவிகித மக்கள் அதிபர் பொலுவார்த்தேவின் ஆட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனால், அவர் மக்களிடையே செல்வாக்கற்ற அதிபராக அறியப்படுகிறார்.
கடந்த வாரம் பெரு, ஈகுவடார், பொலிவியா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய அண்டீயன் நாட்டுப் பகுதியில் அதிகரித்து வரும் வன்முறைகளை முறையாகக் கையாளத் தவறியதாக் குற்றம்சாட்டப்பட்டு பெருவின் உள்துறை அமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அண்மையில், அந்நாட்டைச் சேர்ந்த அர்மோனியா 10 என்ற இசைக்குழுவை தலைநகர் லிமாவில் தாக்கிய மர்ம நபர்கள் அந்த குழுவின் முன்னணிப் பாடகரான பால் ஃப்லோரஸ் (39) என்பவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதன் பின்னர், அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்த்து பெரு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அதிபர் பொலுவார்த்தே கடந்த 19 ஆம் தேதியன்று லிமாவில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி தலைநகர் முழுவதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
முன்னதாக, கடந்த ஆண்டில் மட்டும் பெருவில் 2,057 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் அதிபர் பொலுவார்த்தேவின் அரசு கடந்த செப்டம்பர் முதல் டிசம்பர் வரை அந்நாட்டில் அவசர நிலையைப் பிரகடப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தென்கொரியா காட்டுத் தீ: மீட்புப் பணி ஹெலிகாப்டர் விபத்து! விமானி பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.