லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதைப் பற்றி...
லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.AP
Published on
Updated on
1 min read

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடர்ந்திருந்தது.

இந்நிலையில், கடந்த நவம்பரிலிருந்து முதல்முறையாக இஸ்ரேல் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இன்று (மார்ச் 28) புதியதொரு வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் பயங்கர சத்ததுடன் வெடித்த குண்டுகளினால் பெய்ரூட்டின் சில பகுதிகள் புகைமூட்டமாகக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்த தாக்குதலானது பெய்ரூட்டின் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியில் நடத்தப்பட்டுள்ளதாகவும் தாக்குதல் நடைபெற்ற இடத்தின் அருகில் குறைந்தது இரண்டு பள்ளிக்கூடங்கள் உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்து எந்தவொரு தகவலும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

இருப்பினும், தஹியே பகுதியிலுள்ள ஹிஸ்புல்லாவின் டிரோன் கிடங்குளைத் தாக்கி தகர்த்துள்ளதாகவும் ஹிஸ்புல்லா அங்குள்ள மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

மேலும், வடக்கு இஸ்ரேலின் மீதான ஹிஸ்புல்லாவின் தாக்குதலுக்கு பழி தீர்க்கும் நடவடிக்கை எனக் கூறி இஸ்ரேல் பெய்ரூட்டின் புறநகர் பகுதியிலுள்ள மக்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்டிருந்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ஆனால், இஸ்ரேலின் வடக்குப் பகுதிகளில் தாங்கள் எந்தவொரு தாக்குதலும் நடத்தவில்லை எனவும் லெபனான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் சாக்குப்போக்கைத் தேடுவதாகவும் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படை குற்றம் சாட்டியது.

இந்தத் தாக்குதல்களினால் லெபனான் அரசு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளது. மேலும், தாக்குதல் நடைபெற்ற பகுதிகளில் வசித்தவர்கள் தங்களது வாகனங்கள் மூலமாகவோ அல்லது நடந்தோ அங்கிருந்து தப்பி செல்வது இதுகுறித்து வெளியான விடியோக்களில் பதிவாகியுள்ளது.

முன்னதாக, இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேல் ராணுவம் லெபனான் எல்லையிலிருந்து வெளியேற வேண்டிய காலக்கெடுவானது ஜனவரியிலிருந்து கடந்த பிப்.15 வரை நீடிக்கப்பட்டது.

ஆனால், இஸ்ரேல் ராணுவம் லெபனானின் 5 இடங்களில் வெளியேறாமல் முகாமிட்டிருந்தது. இத்துடன், கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com