பாஜக அரசுக்கு சம்மட்டி அடி: ஆர்.எஸ். பாரதி

அமலாக்கத்துறை செயல்பாட்டுக்கும் பாஜகவின் விமரிசனத்திற்கும் சம்மட்டி அடி கொடுப்பது போன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது
ஆர்.எஸ். பாரதி
ஆர்.எஸ். பாரதிகோப்புப்படம்
Published on
Updated on
2 min read

அமலாக்கத்துறை செயல்பாட்டுக்கும் பாஜகவின் விமரிசனத்திற்கும் சம்மட்டி அடி கொடுப்பது போன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த மாா்ச் மாதம் அமலாக்கத் துறை திடீா் சோதனை செய்தது. அப்போது சோதனையின் முடிவில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிவித்தது.

பின்னர் இது தொடா்பாக பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் விசாகன் உள்ளிட்ட டாஸ்மாக் நிறுவனத்துடன் தொடர்புடைய அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து டாஸ்மாக் வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி ஏ.ஜி. மாசிஹ் அமர்வு முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்ததது. அப்போது, டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது. வரம்பு மீறி நடக்கிறது.

முறைகேடு நடந்தது என்றால் சம்மந்தப்பட்ட தனி நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கலாம், தனி நபர்கள் செய்த விதிமீறலுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கூட்டாட்சிக்கு எதிராக அமலாக்கத் துறை செயல்படுவதாக தெரிவித்ததுடன் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், அமலாக்கத்துறை செயல்பாட்டுக்கும் பாஜகவின் விமரிசனத்திற்கும் சம்மட்டி அடி கொடுப்பது போன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் அமலாக்கத்துறை பாஜகவுக்கு எதிரான கட்சிகள் மீது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எப்படியாவது திமுக அரசுக்கு கலங்கம் விளைவிக்க வேண்டும் என்கிற நோக்கில் அமலாக்கத்துறை செயல்பட்டு வந்தது.

அமலாக்கத்துறை செயல்பாட்டுக்கும் பாஜகவின் விமரிசனத்திற்கும் சம்மட்டி அடி கொடுப்பது போன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதற்கு பிறகாவது மத்திய அரசு அமலாக்கத் துறையை தவறாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். அமலாக்கத் துறை பிளாக் மெயில் எஜென்சி போல செயல்படுகிறது.

திண்டுக்கல்லில் அமலாக்கத் துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்ட செய்தியை பார்த்தோம். அமலாக்கத்துறை என்பது பிளாக்மெயில் அமைப்பு போன்று செயல்படுகிறது என்பதை உச்ச நீதிமன்றமும் சுட்டிக்காட்டி உள்ளது என்றார்.

அமலாக்கத் துறை சோதனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது எதிர்க்கட்சிகளுக்கு வயிற்று எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

மேலும், துணைவேந்தர் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com