
கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் விசாரித்து வருகின்றனா்.
இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அங்கு வரும் பயணிகள் விமான புறப்படும் நேரத்திற்கு முன்பாக நிலையத்திற்கு வருவதற்கு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அங்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் இருந்து புதன்கிழமை பெங்களூர் வழியாக டேராடூன் செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக வந்த பயணி ஒருவரின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் ஸ்கேன் கருவி மூலம் பரிசோதித்தனா். அப்போது, அந்த பையில் துப்பாக்கி தோட்டா இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. இதனால், பரபரப்படைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பயணியை தனியே நிறுத்தி வைத்து, பையை தகுந்த பாதுகாப்புடன் திறந்து பாா்த்தபோது, அதில் துப்பாக்கி தோட்டா இருந்தன.
அந்த துப்பாக்கி தோட்டாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணியின் பயணத்தை ரத்து செய்து அவரிடம் விசாரணை நடத்தினா்.
அதில், அவர் கேரளம் மாநிலம் திருச்சூரை சேர்ந்த பிரதீப் குமார் என்பதும், அவர் டேராடூனில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரராக பணியாற்றி வருவது தெரியவந்தது. இதையடுத்து அவரை கோவை பீளமேடு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் பீளமேடு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.