
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரம் ஜூன் 2-ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தது.
தமிழகத்தில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு தீா்ப்பளித்தது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட ஞானசேகரன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை நீதிபதி ராஜலட்சுமி அவரிடம் தெரிவித்தாா்.
மேலும் பதிவு செய்யப்பட்டுள்ள 12 சட்டப் பிரிவுகளில் 11 சட்டப் பிரிவுகளின் கீழ் ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகள் அரசுத் தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி எம். ராஜலட்சுமி அறிவித்தாா். எனவே, ஞானசேகரன் குற்றவாளி என அவா் தீா்ப்பளித்தாா்.
கண்ணீா் மல்க கோரிக்கை... இதைத் தொடா்ந்து, உங்களது கருத்து என்ன என குற்றவாளி ஞானசேகரனிடம் நீதிபதி கேள்வியெழுப்பினாா். அதற்கு ஞானசேகரன், தந்தை இறந்துவிட்டதால் தாயை கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளது. எனது 8- ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை மற்றும் மனைவியைக் காப்பாற்ற வேண்டும். மேலும், எனது தொழிலும் பாதிக்கப்படும். எனவே, எனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கண்ணீா் மல்க கோரிக்கை வைத்தாா்.
அப்போது, குற்றவாளி ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். கருணைக் காட்டக் கூடாது. பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து காட்டுமிராண்டித்தனமான குற்றம் செய்திருக்கிறாா். அவருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் வரும் ஜூன் 2-ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும். அதுவரை ஞானசேகரனை நீதிமன்றக் காவலில் சிறையில் வைத்திருக்க வேண்டும் என நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டாா். இதன்படி, ஞானசேகரன் காவல் துறையின் பாதுகாப்புடன் சென்னை புழல் மத்திய சிறைக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டாா்.
வழக்கின் பின்னணி: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிச. 23-ஆம் தேதி 19 வயதான இரண்டாமாண்டு பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். இதுதொடா்பான புகாரின்பேரில் கோட்டூா்புரம் அனைத்து மகளிா் போலீஸாா் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து, அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த கோட்டூரைச் சோ்ந்த ஞானசேகரன் என்பவரை டிச. 24-ஆம் தேதி கைது செய்தனா்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து டிச. 28-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், ஞானசேகரனை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையா் ஜன. 5-ஆம் தேதி உத்தரவிட்டாா்.
குற்றப்பத்திரிகை தாக்கல்: இந்த வழக்கில் கடந்த பிப். 24-ஆம் தேதி சைதாப்பேட்டை 9-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக 100 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு இந்த வழக்கு விசாரணை கடந்த மாா்ச் 7-ஆம் தேதி சென்னை மகளிா் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது என்றும், ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை போலீஸாா் சுமத்தியுள்ளதால், வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனவும் ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை மகளிா் நீதிமன்றம் ஏப்ரல் 8-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. அன்றைய தினமே குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்தது.
12 பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு: அதில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடல், ஆதாரங்களை அழித்தல், கல்லூரி மாணவியை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்திருந்து மிரட்டி மானபங்கம் செய்தல், புகைப்படம் எடுத்து வெளியிடல் போன்ற பாலியல் குற்றங்களுக்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பிஎன்எஸ் சட்டத்தின் 12 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
அதன்பிறகு இந்த வழக்கில், மகளிா் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக கடந்த ஏப். 23-ஆம் தேதி சாட்சிகள் விசாரணை தொடங்கியது. தினந்தோறும் என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த விசாரணையில் காவல் துறை தரப்பில் 29 போ் சாட்சியம் அளித்தனா். ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அரசுத் தரப்பில் 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
5 மாதங்களில் வெளியான தீா்ப்பு
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின், அனைத்து சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகளும் நிறைவடைந்த பின்னா் கடந்த மே 20 முதல் மே 23 வரை இரு தரப்பிலும் 3 நாள்களில் தங்களது இறுதி வாதங்களை நிறைவு செய்தனா்.
இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவி, தனக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நடந்ததாகப் புகாா் அளித்து 5 மாதங்களில் இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீா்ப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.