
கொள்ளுப்பாளையம் பகுதியில் அத்திக்கடவு குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்து வருகிறது. துர்நாற்றத்துடன் புழுக்களும் கலந்து வரும் இந்த நீரால் கிராம மக்கள் சிரமத்து ஆளாகியுள்ளனா். பலரே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், அரசூர் ஊராட்சியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அத்திக்கடவு குடிநீர் மற்றும் ஆழ்துளைக் கிணறு குடிநீர் ஆகிய இரண்டும் கடந்த பல ஆண்டுகளாக ஒரே குழாய் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக அத்திக்கடவு குடிநீர் கடுமையான துர்நாற்றத்துடனும், புழுக்களுடனும் விநியோகிக்கப்பட்டு வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த தண்ணீரைக் குடித்த குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பலருக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டுள்ளன. மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றபோது, குடிநீர் பிரச்னையால்தான் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக மக்கள் கூறினர்.
இதையடுத்து வீட்டிற்கு வந்து குடிநீர் குடங்களைப் பார்த்தபோது, அதில் அதிகயளவில் புழுக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் புகார் தெரிவித்துள்ளனர்.
மக்கள் வேதனை: அத்திக்கடவு குடிநீருக்கு தனியாக குழாய் அமைக்க வேண்டும் என்று பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்தனர். மேலும், பல்வேறு இடங்களில் கழிவுநீர் வெளியேறும் குழிகளுக்குள்ளேயே குடிநீர் குழாய்கள் செல்வதாகவும் தற்போது மழைக்காலம் என்பதால், மாசடைந்த இந்த குடிநீரை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு அரசூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய்களை முறையாக அமைத்து, சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.