பிடிஆர் ஆதரவாளர் திமுகவில் இருந்து நீக்கம்!

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளரும், மதுரை மேயர் இந்திராணியின் கணவருமான பொன் வசந்த் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த்.
Published on
Updated on
1 min read

மதுரை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளரும், மதுரை மேயர் இந்திராணியின் கணவருமான பொன் வசந்த் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

மதுரையில் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் மே 31-ஆம் தேதி விமானம் மூலம் மதுரை வருகிறாா். விமான நிலையம் முதல் மதுரை புது சிறைச்சாலை சாலை வரை அவா் வாகனப் பேரணி மேற்கொண்டு, பொதுமக்கள், தொண்டா்களைச் சந்திக்கிறாா்.

பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், குரு திரையரங்கம், காளவாசல், திருமலைநாயக்கா் சிலை வழியே புது சிறைச்சாலையைச் சென்றடைகிறாா். அங்கு, மதுரை மாநகராட்சியின் முதல் மேயரும், திமுகவின் மூத்த முன்னோடியுமான மறைந்த முத்துவின் புதிய வெண்கலச் சிலையை முதல்வா் திறந்து வைக்கிறாா்.

முதல்வர் வருகையொட்டி, மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான மூர்த்தி, மணிமாறன், தளபதி ஆகியோர் கடந்த 23 ஆம் தேதி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினர்.

ஆனால், அதே நாளில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை மேயர் இந்திராணி நடத்தினார். இதனை திமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். இருப்பினும் அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் கூட்டத்தை நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றினார் மேயர்.

மேயரின் இந்த நடவடிக்கைக்கு பின்னால் அவரது கணவர் பொன்வசந்த் இருந்து செயல்பட்டதாக புகார்கள் எழுந்தது. மேலும், மதுரை மாநகராட்சி டெண்டர் விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் அவர் ஈடுபட்டு வந்ததாக புகார்கள் எழுந்தது.

இந்தநிலையில், மதுரை மாநகர் 57 ஆவது வார்டை சேர்ந்த பொன் வசந்த் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் வருகைக்கு இரண்டு நாள்களே உள்ள நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் பொன்வசந்த் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது கட்சியில் உள்பூசல் நிலவி வருவதை தெளிவாக காட்டுவதாக கட்சியினர் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com