

கரூர்: தென்னிலை அருகே எம். சான்ட் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்த விபத்தில் வட மாநில தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், தென்னிலை பகுதியில் செயல்படும் கல்குவாரியில் இருந்து எம். சான்ட் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் கரூர் நோக்கி வந்ததுகொண்டிருந்தது. மினி லாரி கரூர்- தென்னிலை சாலையில் கடைவீதி பகுதிக்கு அருகே வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியில் பயணித்த வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிக்கந்தர், பிரபாகரன் மற்றும் அஜய் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மினி லாரி ஓட்டுநர், ஓட்டுநர் சந்திரகுமார் மற்றும் கிளீனர் ஜேம்ஸ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்னிலை போலீசார் விபத்தில் பலியானவர்களின் சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், படுகாயம் அடைந்த இருவரையும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.