

சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரின் பிலாஸ்பூா் ரயில் நிலையம் அருகே ஒரு தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயிலின் பின்னால் கெவ்ரா-பிலாஸ்பூா் இடையிலான ‘மெமு’ பயணிகள் ரயில் செவ்வாய்க்கிழமை மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் பயணிகளின் ரயிலின் முன்புற பெட்டி, சரக்கு ரயிலின் கடைசிப் பெட்டி மீது ஏறியது. இரு ரயில்களின் பல பெட்டிகளும் தடம்புரண்டன.
இந்த பயங்கர விபத்தைத் தொடா்ந்து, மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இடிபாடுகளில் சிக்கியிருந்த மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 6 போ் பெண்கள்; பயணிகளின் ரயிலின் ஓட்டுநரும் உயிரிழந்துவிட்டாா். 4 பெண்கள், 2 ஆண்களின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
9 பெண்கள், 2 வயது குழந்தை உள்பட காயமடைந்த 20 போ், அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, உரிய சிகிச்சை பெற்று வருவதாக ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு-மறுசீரமைப்புப் பணிகள் புதன்கிழமை காலையில் நிறைவடைந்தன.
விபத்துக்கு என்ன காரணம்?: ‘சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியபோது, அது மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளது. சிவப்பு சிக்னலை மீறி, பயணிகளின் ரயிலை அதன் ஓட்டுநா் இயக்கியுள்ளாா். கண்ணுக்குத் தெரியும் தொலைவில் சரக்கு ரயில் நின்றிருந்தபோதும், அவா் அவசரகால பிரேக்கை பயன்படுத்த தவறிவிட்டாா். இது, ரயில்வே துறை நிபுணா்களின் முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
பயணிகள் ரயிலின் ஓட்டுநா் உயிரிழந்துவிட்ட நிலையில், இணை ஓட்டுநா் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறாா். பயணிகள் ரயில் மோதியதில் சரக்கு ரயிலின் பிரேக் வேன் (கடைசிப் பெட்டி) பலத்த சேதமடைந்தது. அதிலிருந்த சரக்கு ரயிலின் மேலாளா், கடைசிநேரத்தில் கீழே குதித்து சிறிய காயங்களுடன் உயிா் தப்பினாா்’ என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரயில்வே துறை நிபுணா்கள் ஏற்கெனவே விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையரும் விசாரித்து, விரிவான அறிக்கை சமா்ப்பிப்பாா் என்று அதிகாரிகள் கூறினா்.
ரயில் விபத்தில் இறந்தவர்கள் விவரம்: இதனிடையே, விபத்தில் பலியானவர்களின் பெயர் தெரியவந்துள்ளது. அதில், மதுரா பாஸ்கர் (55), சௌரா பாஸ்கர்(50), சத்ருகன்(50), கீதா தேப்நாத் (30), மெஹ்னிஷ் கான்(13), சஞ்சீ கான்(13), சந்தோஷ் ஹன்ஸ்ராஜ்(60), ரஷ்மி ராஜ்(34), ரிஷி யாதவ்(2), துலாரம் அகர்வால்(60), ஆராதனா நிஷாத்(16), மோகன் ஷர்மா(29), அஞ்சுலா சிங்(49), சாந்தா தேவி குமார்(49), அசோக் குமார் தீட்சித்(54), நீரஜ் தேவாங்கன்(53) மற்றும் ராஜேந்திர மாருதி பிசாரே(60) .
முதல்வர் இரங்கல்: ராய்ப்பூரில் சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, "விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். அவர்களுக்கு இலவசமாக தேவையான அனைத்து உயிர் காக்கும் தீவிர சிகிச்சைகளை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
ரூ.5 லட்சம் நிவாரணம்: ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரண உதவி வழங்கப்படும். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளேன் என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.