

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் உள்ள பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறுத்தை ஒன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பலியானது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் உள்ள மேம்பாலப் பகுதியில் (சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை) செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிறுத்தை ஒன்று சாலையைக் கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிச் சென்றதில் சிறுத்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.
இதைத் தொடர்ந்து அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் விக்கிரவாண்டி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். மேலும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் சிறுத்தை உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தினர். வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மீட்டு, உடல்கூறாய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
எங்கிருந்து வந்தது சிறுத்தை: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் இதுவரை சிறுத்தை நடமாட்டம் தென்படாத நிலையில், திடீரென சாலையைக் கடக்க முயன்ற சிறுத்தையை அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்திருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விக்கிரவாண்டி பகுதிக்கு சிறுத்தை எப்படி வந்தது, வேறு பகுதியிலிருந்து வழித்தவறி வந்ததா என வனத்துறையினர் விசாரணை மேற்காண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.