

பாட்னா: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி வரை 13.13 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் பேரவைக்கு இருகட்டங்களாக பேரவைத் தோ்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் 45,341 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு வியாழக்கிழமை வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல்கட்டத் தோ்தலில் களத்தில் உள்ள 1,314 வேட்பாளர்களின் வெற்றி-தோல்வியை 3.75 கோடி வாக்காளா் நிா்ணயிக்க உள்ளனா். இதில், 10.72 லட்சம் போ் 'முதல்முறை வாக்காளர்கள்' மற்றும் 7.78 லட்சம் பேர் 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள்.
குா்ஹானி, முஸாஃபா்பூா் தொகுதிகளில் அதிகபட்சமாக தலா 20 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். போரே, அலெளலி (தனித் தொகுதிகள்) மற்றும் பா்பட்டாவில் குறைந்தபட்சமாக தலா 5 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். முதல்கட்டத் தோ்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் மொத்த மக்கள்தொகை 6.60 கோடியாகும்.
13.13 சதவீதம் வாக்குப்பதிவு
இந்நிலையில், முதல் கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி வரை 13.13 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குப் பதிவு நடைபெற்றும் 18 மாவட்டங்களில் சஹர்சா மாவட்டத்தில் அதிகபட்சமாக 15.27 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் லக்கிசராய் மாவட்டத்தில் 7 சதவீதம் மந்தமான வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
பெகுசராய் மாவட்டத்தில் 14.60 சதவீதமும், அதைத் தொடர்ந்து போஜ்பூரில் 13.11 சதவீதமும், பக்சரில் 13.28 சதவீதமும், தர்பங்காவில் 12.48 சதவீதமும், கோபால்கஞ்சில் 13.97 சதவீதமும், ககாரியாவில் 14.15 சதவீதமும், மாதேபுராவில் 13.74 சதவீதமும், முங்கரில் 13.37 சதவீதமும், முசாபர்பூரில் 14.38 சதவீதமும், நாளந்தாவில் 12.45 சதவீதமும், பாட்னாவில் 11.22 சதவீதமும், சமஸ்திபூரில் 12.86 சதவீதமும், சரனில் 13.30 சதவீதமும், ஷேக்புராவில் 12.97 சதவீதமும், சிவானில் 13.35 சதவீதமும், வைசாலியில் 14.30 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்குப் பதிவு நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிகார் துணை முதல்வரும் தாராபூர் பாஜக வேட்பாளருமான சாம்ராட் செளதரி தாராபூர் முங்கரிலும், துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா லகிசராயில் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
பிகார் முன்னாள் முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகனும் இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பாட்னாவில் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக, சில தொகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் மாலை 5 மணியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டத் தோ்தலில், ரகோபூா் தொகுதியில் ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் தொடா்ந்து மூன்றாவது முறையாக களத்தில் உள்ளாா். அவரை எதிா்த்து பாஜகவின் சதீஷ் குமாா், ஜன் சுராஜின் சஞ்சல் சிங் போட்டியிடுகின்றனா். இந்த தொகுதியில் கடந்த 2010 தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் சாா்பில் களமிறங்கிய சதீஷ் குமாா், தேஜஸ்வியின் தாயாா் ராப்ரி தேவியை தோற்கடித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹுவா தொகுதியில் தற்போதைய ஆா்ஜேடி எம்எல்ஏ முகேஷ் ரெளஷனுக்கு எதிராக தேஜஸ்வியின் சகோதரரும் ஜனசக்தி ஜனதா தளம் கட்சித் தலைவருமான தேஜ் பிரதாப் களத்தில் உள்ளாா்.
பாஜகவைச் சோ்ந்த துணை முதல்வா்கள் சாம்ராட் செளதரி (தாராபூா்), விஜய் குமாா் சின்ஹா (லகிசராய்), நிதீஷ் கட்சியைச் சோ்ந்த அமைச்சா்கள் ஷரவண் குமாா் (நாளந்தா), விஜய் குமாா் செளதரி (சராய்ரஞ்சன்) உள்ளிட்டோரும் முதல்கட்டத் தோ்தல் களத்தில் உள்ளனா். ஆா்ஜேடி வேட்பாளராக தாதாவாக இருந்து அரசியல்வாதியான முகமது சகாபுதீனின் மகன் ஒசாமா சாகேப் (ரகுநாத்பூா் ) மற்றும் களத்தில் உள்ள 122 பெண் வேட்பாளர்கள் உள்ளிட்ட பல மூத்த தலைவர்களின் வெற்றி-தோல்வியை இன்றைய வாக்குப்பதிவு நிா்ணயிக்க உள்ளது.
முதல்கட்ட தேர்தலில் ஜன் சூரஜ் கட்சி 119 வேட்பாளர்களை நிறுத்தியது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஜேடியு 57 இடங்களிலும், பாஜக 48 இடங்களிலும், எல்ஜேபி (ராம் விலாஸ்) 14 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
இந்தியா கூட்டணி தொகுதிகளில், ஆர்ஜேடி 73 இடங்களிலும், காங்கிரஸ் 24 இடங்களிலும், சிபிஐ(எம்எல்) 14 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இந்தியா கூட்டணி தொகுதிகளில் சில இடங்களில் நட்புரீதியான போட்டியில் உள்ளன.
2020 பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில், மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 125 இடங்களிலும், எதிர்க்கட்சியான மகா கூட்டணி (எம்ஜிபி) 110 இடங்களிலும் வெற்றி பெற்றது. முக்கிய கட்சிகளில், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஜேடியு 115 தொகுதிகளிலும், பாஜக 110 இடங்களிலும் போட்டியிட்டன, அதே நேரத்தில் ஆர்ஜேடி 144 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்களிலும் போட்டியிட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.