

சென்னை: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் இல்லை என்றால் உடனடியாக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை தமிழக பாஜக மகளிர் அணியினர் சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மாநில துணைத்தலைவர் குஷ்பூ சுந்தர் ஆகியோர் தலைமையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன்,
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. கோவை போன்ற நகரத்திலேயே ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக தூக்கி வீசப்பட்டிருப்பது, தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை நிர்வாணமாக்கியுள்ளது என்றார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் , பெண்கள் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் கூட்டம் நடத்தாமல், தேர்தல் வெற்றிக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார். மத்திய உள்துறை தகவலின்படி, 2023-ஐ ஒப்பிடுகையில் 2024 மற்றும் 2025-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், போக்ஸோ வழக்குகளும் தமிழகத்தில் அதிகரித்துள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க முக்கியக் காரணம் போதை மற்றும் டாஸ்மாக் தான் என்றார். டாஸ்மாக்கை ஒழிப்பதாகக் கூறிவிட்டு, இப்போது அதைத் தொடர்ந்து நடத்துவது வெட்கக்கேடானது. "ஒரு பெண்ணுக்குக்கூட நீங்கள் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால், நீங்கள் ஆட்சியில் அமர்வதற்கும் தொடர்வதற்கும் எந்தத் தார்மீக உரிமையும் இல்லை". பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் இல்லை என்றால் உடனடியாக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.
குற்றம் நடந்த 48 மணி நேரத்தில் குற்றவாளிகளைப் பிடிப்பதாகக் கூறுவது, குற்றத்தைத் தடுக்கத் தவறியதைக் காட்டுகிறது. குற்றம் செய்யப்படுவதற்கு முன்னால் அந்தப் பெண்ணை ஏன் பாதுகாக்க முடியவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள்ளாக குற்றவாளிகளை சுட்டுப் பிடித்தோம் என்கிறார்கள். இனி தமிழ்நாட்டில் பெண்கள் துப்பாக்கியோடு தான் வெளியில் செல்ல வேண்டும் என்றார். மேலும் உதவி எண் 181 சரியாக வேலை செய்வது கிடையாது என்றும் தமிழ்நாட்டில் காவலர்கள் தான் சரியாக வேலை செய்வதில்லை காவலன் சிலைகளையாவது சரியாக வேலை செய்கிறதா என்று நாங்கள் பார்க்கப் போகிறோம் என்றார்.
பெண்களின் மீது கை வைப்பவர்களுக்கு கை இருக்காது
இதேபோன்று கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் குற்றம் நடந்தது தொடர்பான கேள்விக்கு எந்த ஆட்சியாக இருந்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கண்டிக்கத்தக்கது என்றும் இனிமேல் தமிழ்நாட்டில் பெண்களின் மீது கை வைப்பவர்களுக்கு கை இருக்காது என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.