

மதுரை: தமிழ்நாட்டில் படித்து முடித்துவிட்டு நாட்டிற்கு சேவை செய்வதற்கு கோடிக்கணக்கான இளைஞர்கள் தகுதியோடு காத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் திமுக ஆட்சியில் தகுதியுள்ள இளைஞர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு பணத்தால் மதிப்பீடு செய்கிற காலமாக உள்ளதால் இளைஞர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் பேசியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் படித்து முடித்துவிட்டு நாட்டிற்கு சேவை செய்வதற்கு கோடிக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், தகுதியுள்ள இளைஞர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு மனத்தால் மதிப்பீடு செய்வது மறைந்து போய் பணத்தால் மதிப்பீடு செய்யும் இன்றைய நிலையால் இளைஞர்களுடைய எதிர்காலம், நம்பிக்கை, வேலை வாய்ப்பு என்ன ஆகும், வறுமை ஒழிப்பு என்ன ஆகும், நாட்டின் வளர்ச்சி என்ன ஆகும் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
இன்றைக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவின் சகோதரர் கடத்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வங்கி ஒன்றில் பல கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். அந்த கடனை திருப்பிச் செலுத்த நிலையில், வங்கி அதிகாரிகள் காவல்துறைக்கு செல்ல, அது எப்படியோ அமலாக்கத் துறைக்கு தெரியவர, அவர்கள் அவரது வீட்டை சோதனையிட்ட போது அங்கு நகராட்சி பணியாளர் துறையில் நடைபெற்ற ரூ.888 கோடி ஊழல் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
லட்சக்கணக்கான இளைஞர்களும், இளம் பெண்களும் அரசு வேலை என்ற கனவை சுமந்து டிஎன்பிசிஎஸ் தேர்வை பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் எழுதி வரும் நிலையில், பணம் வாங்கிக்கொண்டு 2,538 பேருக்கு முதல்வரின் கையாலே பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. பணம் பெற்றுக் கொண்டு பணி நியமனம் நடைபெற்றுள்ளது முதல்வரின் கவனத்திற்கு தெரியாமல் இது நடந்திருக்கும்? என்கிற கேள்வி இளைஞர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
ஊழலுக்கான ஆதாரங்களை காட்டி தவறு செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யுங்கள் என்று அமலாக்கத்துறை சொல்கிறது. ஆனால் நாங்கள் என்ன தபால்காரர்களா? என்று கேள்வி கேட்கிறது மாநில காவல் துறை. இந்த நான்கரை ஆண்டுகளில் ஊழல் செய்வது, ஊழல்வாதிகளை பாதுகாப்பது தான் திமுக அரசினுடைய கடமையாக இருந்து வருகிறது.
தங்கள் அதிகாரத்திற்கு வருவதற்காக செலவு செய்தை பணத்தை திரும்ப எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பொதுமக்களிடம் கையூட்டு பெறுவதை நாம் நடைமுறையில் பார்த்து வருகிறோம். இதனால் நாட்டில் லஞ்சம் ஊழல் அதிகரித்துள்ளதே தவிர, அரசு பணியின் நேர்மை கேள்விக்குறியாகி உள்ளது.
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், சமதர்மம் என்று சொல்லுகிற நாம், அரசு பணியிடங்களை மனத்தால் மதிப்பீடு செய்யாமல் பணத்தால் மதிப்பீடு செய்து வேலைவாய்ப்பு வழங்குவது வேதனையின் உச்சமாக இன்றைக்கு இளைஞர்கள் மத்தியிலே இருக்கிறது.
இளைஞர்களுக்கு அரசியலிலே போட்டியிடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொல்லுகிறார். ஆனால் இந்த அரசை நம்பி டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி காத்திருக்கும் தகுதியான இளைஞர்கள் எல்லாம் பணம் கொடுக்க முடியாததால் புறக்கணிக்கப்பட்டிருப்பதால் எங்கே போனது உங்கள் சமூக நீதி? இதற்கெல்லாம் முதல்வரோ, துணை முதல்வரோ பதில் சொல்லாதது ஏன்?
துறை சார்ந்திருக்கும் அமைச்சரோ நான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் விசாரணையில் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார். ஆகவே இளைஞர்களின் எதிர்காலம் எங்கே போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இன்றைக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களின் கவலைகள் எல்லாம், இந்த அரசு நமது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறதே என்பதுதான்.
இதற்கெல்லாம் நாம் தண்டனை தர வேண்டாமா? பாடம் கற்பிக்க வேண்டாமா? நாம் விழிப்புணர்வுகளோடு செயல்பட வேண்டாமா? என்ற கேள்வி இளைஞர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
எனவே, இளைய சமுதாயத்தினர் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இந்த அரசை அதிகாரத்தில் இருந்து வீட்டுக்கு அனுப்பினால் தான் நீங்கள் நாட்டிற்கு சேவை செய்வதற்கான பணி ஆணை உங்கள் வீடு தேடி வரும். வரும் 2026 பேரவைத் தேர்தலில் இளைய சமுதாயமே மு.க.ஸ்டாலின் தலைமையிலான மன்னராட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். மீண்டும் மக்களாட்சி மலர் செய்ய வேண்டும் எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.