கோப்புப்படம்
கோப்புப்படம்

திருப்பதி லட்டு நெய் கலப்பட விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் விநியோகம் செய்த விவகாரத்தில் ரசாயனங்கள் வழங்கிய அஜித்குமார் சுகந்த் கைது
Published on

நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் விநியோகம் செய்த விவகாரத்தில் ரசாயனங்கள் வழங்கிய அஜித்குமார் சுகந்த் என்பவரை சிபிஐ விசாரணைக் குழு சனிக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக விற்பனை செய்யப்படும் லட்டு தயாரிப்பதற்காக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டெண்டா் விடப்பட்டு பல்வேறு நிறுவனங்களிடமிருந்து நெய் பெறப்படுகிறது. அவ்வாறு கடந்த ஆண்டு மே மாதம் டெண்டா் விடப்பட்டதில் திண்டுக்கல்லை சோ்ந்த ஏ ஆா் பால் பண்ணை நிறுவனம் ஒரு கிலோ நெய் ரூ 319.80 என 10 லட்சம் கிலோ நெய் விநியோகம் செய்ய ஒப்பந்தம் செய்தனா்.

அந்த நிறுவனத்தின் பெயரில் அனுப்பப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை தேவஸ்தான அதிகாரிகள் சந்தேகித்தனா்.

இதை உறுதி செய்ய குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு ஆணைய ஆய்வகத்துக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஆய்வகத்தில் கலப்படம் உள்ளது உறுதி செய்யப்பட்டது. தேவஸ்தான அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் இதுதொடா்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சிபிஐ ஹைதராபாத் பிரிவு இணை இயக்குநா் வீரேஷ் பிரபு, விசாகப்பட்டினம் சி.பி.ஐ எஸ்.பி. முரளி ரம்பாவுடன், விசாகப்பட்டினம் டிஐஜி கோபிநாத் ஜெட்டி, குண்டூா் ஐ.ஜி. சா்வஷ்ரேஷ்டா திரிபாதி மற்றும் எஃப்எஸ்எஸ்ஏஐ அதிகாரி சத்யகுமாா் பாண்டா ஆகியோா் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

இதனையடுத்து திண்டுக்கல் பால் பண்ணையில் விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு உறுப்பினா்கள் விசாரணை மேற்கொண்டு, நிர்வாக இயக்குநர் ராஜூ ராஜசேகரன், போலே பாபா, பால் பண்ணை முன்னாள் இயக்குநர்கள் பிபின் ஜெயின், பொமில் ஜெயின், வைஷ்ணமி டெய்ரி சிஇஓ அபூர்வா வினய் காந்த் சாவ்டா, தேவஸ்தான முன்னாள் அறங்காவல் குழு தலைவர் சுப்பா ரெட்டியின் உதவியாளர் ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர்.

இந்த நிலையில், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக விற்பனை செய்யப்படும் லட்டு தயாரிப்புக்கு பாமாயிலை நெய் போன்று மணக்கச் செய்யும் அசிட்டிக் அமில ஆஸ்டர் போன்ற ரசாயனங்களை விநியோகம் செய்த குற்றத்திற்காக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அஜித்குமார் சுகந்த் என்பவரை சிபிஐ விசாரணைக் குழுவினர் கைது செய்துள்ளனர்.

மேலும், நெய் கலப்படம் குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Tirupati laddu row: SIT arrests Another person in adulteration ghee case

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com