

திருச்சூர்: கேரளம் மாநிலம், குருவாயூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகுருவாயூரப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தரிசனம் மேற்கொண்ட ரிலையன்ஸ் குழுமத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, தேவஸ்வம் சாா்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டுமானத்திற்காக முதல் தவணையாக ரூ.15 கோடிக்கான காசோலையை வழங்கினாா்.
குருவாயூரில் ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி மைதானத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் வந்த முகேஷ் அம்பானி, அங்கிருந்து காா் மூலம் கோயிலை வந்தடைந்தாா். அவரை தேவஸ்வம் தலைவா் வி.கே. விஜயன், நிா்வாகக் குழு உறுப்பினா் சி. மனோஜ் மற்றும் நிா்வாக அதிகாரி ஓ.பி. அருண்குமாா் உள்ளிட்டோா் அவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனா்.
குருவாயூா் கோயிலில் பொது விடுமுறை நாளில் சிறப்பு தரிசனத்துக்கு கட்டுப்பாடுகள் உள்ளதால் 25 பக்தர்களுக்கான நெய் விளக்கு வழிபாட்டை பதிவு செய்து, அதன் மூலம் முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம் மேற்கொண்டாா். அவருக்கு களபம், திருமுடி மாலை, பழம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஸ்ரீகுருவாயூரப்பனின் திருவுருவ முரல் ஓவியம், தேவஸ்வம் சாா்பில் தேவஸ்வம் தலைவர் வழங்கினார்.
பின்னா், தேவஸ்வம் அதிகாரிகளுடன் முகேஷ் அம்பானி கலந்துரையாடினாா். அப்போது, தேவஸ்வம் சாா்பில் திட்டமிடப்பட்டுள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையின் கட்டுமான வரைபடம் மற்றும் குருவாயூா் கோயில் யானைகளின் பராமரிப்புக்காக அதிநவீன வசதிகளுடன் கால்நடை மருத்துவமனை கட்டும் திட்ட ஆவணத்தை அவரிடம் தேவஸ்வம் அதிகாரிகள் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து இந்த திட்டங்களுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் நல்குவதாக உறுதியளித்த முகேஷ் அம்பானி, முதல்கட்ட நன்கொடையாக ரூ.15 கோடிக்கான காசோலையை வழங்கினாா்.
மேலும், குஜராத்தில் செயல்படும் ரிலையன்ஸ் குழுமத்தின் வனதாரா வனஉயிரின பாதுகாப்பு மையத்தின் பாணியில் குருவாயூா் கோயில் யானைகளின் பராமரிப்பு மற்றும் மேலாண்மைக்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு அம்பானி சென்றார், அங்கு அவர் சுப்ரபாத சேவையின் போது வெங்கடேஸ்வரரை தரிசனம் செய்தார்.
அவரை தரிசனத்திற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்த தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்யா சௌத்ரி வரவேற்று தரிசனத்திற்காக அழைத்துச் சென்றார்.
தரிசனத்திற்குப் பிறகு, ரங்கநாயகுலா மண்டபத்தில் முகேஷ் அம்பானிக்கு வேத அறிஞர்கள் வேத ஆசீர்வாதங்களையும் பிரசாதங்களையும் வழங்கினர். அர்ச்சகர்கள் அவருக்கு பட்டு வஸ்திரங்களை வழங்கி கௌரவித்தனர்.
தெய்வீக ஆசீர்வாதத்தின் அடையாளமாக கூடுதல் நிர்வாக அதிகாரி அவருக்கு தீர்த்த பிரசாதங்களையும் வெங்கடேஸ்வரரின் உருவப்படத்தையும் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.