ஆர்எஸ்எஸ் தனிநபர்களின் அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது: மோகன் பாகவத்

ஆர்எஸ்எஸ் தனிநபர்களின் அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என அதன் தலைவர் மோகன் பாகவத் கூறியது தொடர்பாக....
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
Updated on
3 min read

பெங்களூரு: பதிவு இல்லாமல் செயல்படுவதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பை காங்கிரஸ் தலைவர்கள் விமரிசனம் செய்து வந்த நிலையில், ஆர்எஸ்எஸ் தனிநபர்களின் அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என அதன் தலைவர் மோகன் பாகவத் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருந்த நிலையில், கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான பிரியங்க் கார்கே, தேசத்திற்கு சேவை செய்வதாகக் கூறிக்கொள்ளும் ஆர்எஸ்எஸ் ஏன் பதிவு செய்யப்படாத அமைப்பாக உள்ளது?, அரசு நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளை தடை செய்ய வேண்டும், பதிவு செய்யப்படாத ஒரு அமைப்பின் தலைவர் மேம்பட்ட பாதுகாப்பினை பெறுவது எப்படி?, அவர் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு இணையாக மதிக்கப்படுவது ஏன்? மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதியளிப்பவர்கள் யார்? என பல கேள்விகளை எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில், ஆா்எஸ்எஸ் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் பிரியங்க் கார்கேவின் கருத்துகளுக்கு பதிலளித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார்.

அப்போது, "ஆர்எஸ்எஸ் 1925 இல் தொடங்கப்பட்டது, எனவே நாங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?" என கேள்வி எழுப்பிய பாகவத்,

தனிநபர்களின் அமைப்பாக அங்கீகாரம்

சுதந்திரத்துக்குப் பிறகு அமைப்பை பதிவுசெய்வது கட்டாயம் என இந்திய அரசு கூறவில்லை. சட்டம் பதிவு செய்யப்படாத தனிநபர்களின் அமைப்புகளைக் கூட அங்கீகரிக்கிறது. நாங்கள் தனிநபர்களின் அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளோம், நாங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு. நாங்கள் வருமான வரி செலுத்துகிறோம். மூன்று முறை தடை செய்யப்பட்டோம், ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்கள் எங்கள் அமைப்பின் மீதான தடையை நீக்கி அங்கீகரித்துள்ளது. அதனால் ஆா்எஸ்எஸுக்கு வருமான வரி செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்து தர்மம் கூட பதிவு செய்யப்படவில்லை

வருமான வரித் துறை மற்றும் நீதிமன்றங்கள் எங்களை ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக அங்கீகரித்துள்ளன. எனவே, நாங்கள் பதிவு செய்ய வேண்டியதில்லை. பல விஷயங்கள் பதிவு செய்யப்படவில்லை, ஏன் இந்து தா்மமும் பதிவுசெய்யப்படாத ஒன்றுதான் என்று அவர் குறிப்பிட்டார்.

மூவர்ணக் கொடிக்கு மிகுந்த மரியாதை

ஆர்எஸ்எஸ் காவி நிறத்தை ஆா்எஸ்எஸ் குருவாக கருதுகிறோம். காவி நிற கொடிகளை மதிக்கிறது. அதே வேளையில், நாட்டின் மூவர்ண கொடிக்கு மிகுந்த மரியாதை அளிக்கிறோம், பாதுகாக்கிறோம் என்று மோகன் பாகவத் கூறினார்.

மேலும், ஆர்.எஸ்.எஸ் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை என்று தெளிவுபடுத்திய பாகவத் , நாங்கள் வாக்கு அரசியல், தற்போதைய அரசியல், தேர்தல் அரசியல் போன்ற எதிலும் பங்கேற்பதில்லை. அமைப்பின் பணி சமூகத்தை ஒன்றிணைப்பதாகும். இயல்பாகவே, அரசியல் பிளவுபடுத்தும் தன்மை கொண்டது என்பதால் நாங்கள் அரசியலில் இருந்து விலகி நிற்கிறோம் என்று கூறினார்.

நாங்கள் கொள்கைகளைத்தான் ஆதரிக்கிறோம். எந்தவொரு தனிநபரையோ, ஒரு கட்சியையோ ஆதரிக்கவில்லை. ஆனால் கொள்கையை ஆதரிப்பதற்காக களத்தில் இறங்கி முழுமூச்சாக செயல்படுவோம் என்றார்.

அதற்கு உதாரணமாக அயோத்தியில் கோயிலைக் கட்டுவதாக பாஜக உறுதியளித்ததால் அந்தக் கட்சிக்கு ஆதரவளித்ததாகவும், அதன் கட்டுமானத்தில் ஆர்எஸ்எஸ் உறுதியாக நின்றதாக கூறிய பாகவத், அதை காங்கிரஸ் அல்லது வேறு எந்த கட்சி செய்திருந்தாலும், அவர்களுக்கு நாங்கள் ஆதரவளித்திருப்போம் என்றார்.

அனைத்துக் கட்சிகளும் எங்களுடையது

எங்களுக்கு எந்தவொரு கட்சி மீது சிறப்பு பாசம் கிடையது. எந்தக் கட்சியும் எங்களுடையது அல்ல, அனைத்துக் கட்சிகளும் எங்களுடையது, ஏனென்றால் அவை பாரதியக் கட்சிகள் என்றார்.

எல்லோருக்கும் எல்லாவற்றையும் கிடைக்கச் செய்வோம்

1857 முதல் சுதந்திரப் போரின் போது, ​​இந்துக்களும் முஸ்லிம்களும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராட ஒன்றிணைந்தனர் என்பதை சுட்டிக்காட்டியவர், இந்த ஒற்றுமையை தங்கள் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக ஆங்கிலேயர்கள் அங்கீகரித்ததாகவும், இந்திய சமூகத்தில் பிளவுகளை வேண்டுமென்றே விரிவுபடுத்த முயன்றதாகவும் பகவத் கூறினார். அத்தகைய பிளவுகளை நிவர்த்தி செய்வதற்கும் குறைப்பதற்கும் ஆர்எஸ்எஸ் ஒரு தொலைநோக்குத் திட்டத்தைத் தொடங்கும். யாரையும் ஒதுக்கி வைக்காமல் முழு சமூகத்தையும் ஒழுங்கமைக்க ஆர்எஸ்எஸ் விரும்புகிறது என்றும், "எல்லோருக்கும் எல்லாவற்றையும் கிடைக்கச் செய்வோம்.." என்பதில் முழு நம்பிக்கை இருப்பதாகவும், சமூக நல்லிணக்கத்திற்காக ஆர்எஸ்எஸ் பாடுபடும் என்று பகவத் கூறினார்.

பாகிஸ்தானுடன் அமைதியை விரும்புகிறோம்

பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவு குறித்து கூறுகையில், ஆர்எஸ்எஸ் எப்போதும் பாகிஸ்தானுடன் அமைதியை விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தான் சமாதானத்தை விரும்பவில்லை என்றும், தேசத்திற்கு தீங்கு விளைவிப்பதில் திருப்தி அடையும் வரை, பாகிஸ்தான் அது அதைச் செய்து கொண்டே தான் இருக்கும். எனவே, நாம் அமைதியை மீறக்கூடாது. ஆனால் பாகிஸ்தான் அந்த அமைதியை மீற விரும்பினால், அது ஒருபோதும் வெற்றிபெறாது, பாகிஸ்தான் தனது நடவடிக்கைகளை சரிசெய்யவில்லை என்றால் ஒரு நாள் பாடம் கற்றுக்கொள்ளும் என்று கூறினார்.

மேலும், "சண்டையிடுவதை விட சமாதானமே நல்லது. அவர்களுக்கு சண்டையிடுவதை தவிர, வேறு எதுவும் தெரியாது என்று நினைக்கிறேன். எனவே அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் நாம் பேச வேண்டும்."

"நாம் அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தகுந்த பதிலடி கொடுத்து தோற்கடித்து, சில இழப்புகளை ஏற்படுத்தியும் அவர்கள் மனம் திருந்தவில்லை" என்று அவர் மேலும் கூறினார்.

சாதிவெறி இல்லை, சாதி குழப்பமே உள்ளது

சாதிவெறி குறித்து பேசுகையில், நாட்டில் சாதிவெறி இல்லை, சாதி குழப்பமே நிலவி வருகிறது. சில சலுகைகளுக்காகவும் தேர்தல்களுக்காகவும் சாதி குழப்பம் நிலவி வருகிறது. எனவே சாதியை ஒழிக்க எந்த முயற்சியும் செய்ய வேண்டிய அவசியமில்லை. சாதியை மறக்க முயற்சி செய்ய வேண்டும். அது மிகவும் எளிதானது. நாம் தனிப்பட்ட முறையில் சாதியை மறக்க முடியும்," என்று அவர் கூறினார்.

Summary

In a veiled remark against the Congress leaders criticising RSS for operating without registration, the Sangh chief Mohan Bhagwat on Sunday said his organisation is recognised as a body of individuals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com