

வாரணாசி: மும்பையில் இருந்து வாரணாசிக்கு பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து வாரணாசி விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
இது தொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,
"மும்பையில் இருந்து வாரணாசிக்கு வரும் எங்கள் விமானம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. இதையடுத்து, உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானத்திற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் தொடங்கப்பட்டது. விமானம் வாரணாசி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டன, அனைத்து பாதுகாப்பு சோதனைகளும் முடிந்ததும் விமானம் சேவை தொடங்கப்படும்" என்று கூறினார்.
விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், மும்பையில் இருந்து 182 பயணிகளுடன் வாரணாசி புறப்பட்ட ஏர் இந்தியா ஐஎக்ஸ் 1023 விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சலில் தகவல் வந்தது.
இதையடுத்து உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தை பாதுகாப்பாக வாரணாசி விமான நிலையத்தில் தரையிறக்க உத்தரவிடப்பட்டது.
விமானம் பாதுகாப்பாக வாரணாசியில் தரையிறக்கப்பட்டதை அடுத்தது பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அங்கு தயார் நிலையில் இருந்த வெடிகுண்டு நிபுணர்கள் குழு, விமானத்தை முழுமையாக சோதனையிட்டது. சோதனையின் முடிவில் எந்தவொரு வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என்று தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மும்பையிலிருந்து வாரணாசி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் விமானம் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தற்போது விமானத்தை வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் சோதனையிட்டதில் அது புரளி என்பது தெரியவந்துள்ளது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய ஆணையம் அறிவித்ததை அடுத்து விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
இதனிடையே, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மற்றும் தில்லி தீயணைப்புப் படையினருக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதையடுத்து தில்லி விமான நிலையத்தின் முனையம் 3 இல் பாதுகாப்பு சோதனைகளைத் தொடங்கியது, ஆனால் பின்னர் அது ஒரு புரளி என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மும்பை, தில்லி, சென்னை மற்றும் கோவா உட்பட பல விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை சோதனைகள் நடத்தப்பட்டன.
தில்லியில் சமீபத்தில் நடந்த கார் குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர், அதைத் தொடர்ந்து பெருநகரம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.