

தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரை சாலையில் அரசு பயிற்சி மருத்துவர்கள் சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் மருத்துவர்கள் 3 பேர் பலியாகினர், 2 பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக இருந்து வரும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சரண்(24), குரும்பேறி மந்தைவெளி வட்டம் ஸ்ரீனிவாசன் மகன் முகிலன் (23), புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பரிசுத்தமன் மகன் ராகுல் ஜெபஸ்தியன் (23), கோயம்புத்தூர் பிஎன் புதூர் சாஸ்திரி 1 ஆவது தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சாரூபன் (23) தூத்துக்குடி தெர்மல்நகர் என்.டி.பி.எல் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் மகன் கிருத்திக்குமார் (23) ஆகியோர் கொட்டும் மழையில் புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை சாலையில் உள்ள ரோச் பூங்கா அருகே காரில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, கன மழை காரணமாக வேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காருக்குள் இருந்த 5 பயிற்சி மருத்துவர்களும் உடல் நசுங்கினர். விபத்து குறித்து அந்த வழியாக சென்ற மீனவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து தூத்துக்குடி நகர போலீஸ் ஏஎஸ்பி மதன் மற்றும் தென்பாகம் போலீசார், தீயணைப்புத் துறையைச் சேர்ந்த முருகையா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த ராகுல்ஜெபஸ்டியன்,சாரூபன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பலத்த காயமடைந்த முகிலன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். மேலும், கிருத்திக் மற்றும் சரண் ஆகியோருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை 3 மணிக்கு கொட்டும் மழையில் எதற்காக 5 மருத்துவர்களும் காரில் சென்றனர். தெர்மல் நகரில் உள்ள பயிற்சி மருத்துவர் வீட்டிற்கு சென்றார்களா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில்அரசு மருத்துவ கல்லுரி பயிற்சி மருத்துவர்கள் 3 பேர் பலியானது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.