

கோவை அரசு மருத்துவமனையில் பணி சுமைகளை அதிகரித்து கொடுமைப்படுத்தும் இருப்பிட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதன்கிழமை தூய்மைப் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு, சராசரியாக 7000 முதல் 9000 பேர் புற நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.
இங்கு தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரவு காவல் பணிக்காக 120 பேர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மருத்துவமனை இருப்பிட மருத்துவ அதிகாரி சரவணபிரியா பணி சுமைகளை அதிகரித்தும், பணிக்கு விடுமுறை எடுத்தால் பணி நீக்கம் செய்வது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும், போலீசில் புகாரளித்து கைது செய்து விடுவதாக மிரட்டி வருவதை அடுத்து இருப்பிட மருத்துவ அதிகாரியை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதன்கிழமை தூய்மைப் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் பல்வேறு பணிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
ஏற்கனவே, மருத்துவமனை இருப்பிட மருத்துவ அதிகாரி சரவணபிரியா, காலை 10.45 மணிக்கு பணிக்கு வந்துவிட்டு பிற்பகல் 1.45 மணிக்கு வீட்டிற்கு சென்றுவிடுவதாகவும், ஒப்பந்த ஊழியர்களை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்துவதாகவும், ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க அவர்களிடமிருந்து ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.