கோவை: பிரதமர் நரேந்திர மோடியின் கோவை வருகையை கண்டித்து கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய கூட்டமைப்பினர் 83 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்னும் சற்றுநேரத்தில் கோவைக்கு வருகிறார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.
இதில், பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, பிரதமர் மோடியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய விவசாயிகள் கூறியதாவது,
"மரபணு மாற்றப்பட்ட விதைகளை உருவாக்க ரூ. 500 கோடி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு, இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க தார்மீக உரிமை இல்லை. மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதிக்க கூடாது. நதி நீர் இணைப்பில் மத்திய அரசு பாராபட்சமாக நடந்து கொண்டிருக்கிறது.
10 ஆண்டுகளாக தென்னக நதிகளை இணைக்க மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு 2 மடங்கு விலை கொடுப்போம் என பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் நெல் டன் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரம் உயர்த்துவது பதிலாக, வெறும் ரூ. 3 மட்டுமே உயர்த்தியுள்ளார். இயற்கை விவசாயத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை. போலி விவசாயிகள் நடத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்" என்று கூறினார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 83 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.