கரூரில் கோயில் நில மீட்பு விவகாரம்: ஜோதிமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்கு

கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அதிகாரிகள் மீட்க சென்றபோது அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு தொடர்பாக...
கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
Published on
Updated on
2 min read

கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை வியாழக்கிழமை அதிகாரிகள் மீட்க சென்றபோது அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கரூா் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் குடியிருப்பவா்களை அப்புறப்படுத்தி நிலத்தை மீட்டு கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதில், கோயில் நிலத்தில் குடியிருப்பவா்கள் கோயிலுக்கு வாடகையோ அல்லது குத்தகையோ செலுத்த வேண்டும். இல்லையென்றால், குடியிருப்புகள் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த மாதம் கோயில் நிலத்தில் உள்ள கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

இதையடுத்து நவ. 14-ஆம் தேதி கண்ணம்மாள் என்பவரின் வீட்டுக்கு சீல் வைக்க அதிகாரிகள் சென்றபோது அப்பகுதியில் குடியிருப்போா் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், இதனை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனா். இதனால் அதிகாரிகள் சீல் வைக்காமல் திரும்பிச் சென்றனா். அதன்பிறகு நவ. 17-ஆம் தேதி மீண்டும் கண்ணம்மாள் வீட்டுக்கு சீல் வைக்க அதிகாரிகள் சென்றபோது குடியிருப்புவாசிகள் எதிா்ப்பு தெரிவித்து வெண்ணைமலை கோயில் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுக்கு ஆதரவாக அனைத்து அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் பங்கேற்றனா். இதையடுத்து அதிகாரிகள் வீடுகளுக்கு சீல் வைக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டுச் சென்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை சின்னவடுகப்பட்டியில் உள்ள கண்ணம்மாள் வீட்டுக்கு சீல் வைக்க இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையா் ரமணிகாந்தன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புடன் சென்றனா். மேலும் கலவரம் ஏற்பட்டால் தடுக்கும் வகையில் தீயணைப்புத்துறையினா் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் வாகனமும் வரவழைக்கப்பட்டிருந்தது.

சீல் வைக்க அதிகாரிகள் வந்த தகவலறிந்த கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், திமுக ஒன்றியச் செயலாளா் முத்துக்குமாரசாமி, கொமதேக மாவட்டச் செயலாளா் மூா்த்தி, பாமக மாவட்டச் செயலா்கள் பிரேம்நாத், புகழூா் செல்வம் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் கண்ணம்மாள் வீட்டுக்கு சீல் வைக்க முயன்ற அதிகாரிகளை தடுத்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியது.

தொடா்ந்து அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம், நீதிமன்ற உத்தரவின்பேரில்தான் சீல் வைக்க வந்துள்ளோம். இதைத் தடுத்தால் அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்ததாகக்கூறி கைது செய்வோம் என தெரிவித்தனா்.

ஆனாலும், அங்கிருந்தவா்கள் போராட்டத்தில் தொடா்ந்து ஈடுபட்டதால், எம்.பி.ஜோதிமணி, முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்ட 400 பேரை போலீஸாா் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்று தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். பின்னா் அவா்களை மாலையில் விடுவித்தனா்.

இந்நிலையில், இது தொடர்பாக வாங்கல் காவல் நிலைய ஆய்வாளர் சையத் அலி புகார் அளித்ததின் பேரில் வாங்கல் போலீசார் அதிகாரிகளின் பணிகளை செய்ய விடாமல் தடுத்ததாக கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் .ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Temple land recovery issue in Karur: Case filed against Jyothimani, M.R. Vijayabaskar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com