கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோ ரயில் அமைப்புகளுக்கான திட்டங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கு தங்களது ஏமாற்றத்தையும், வேதனையையும் தெரிவித்துக் கொள்வதாகவும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். அதிக அளவிலான தனிநபர் வாகனங்களைக் கொண்டும், நாட்டிலேயே மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்கி வரும் நிலையில், அனைத்து வகையிலும் பெரிய அளவிலான வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பெரும்நகரங்களில், அதிக திறன் கொண்ட பொது போக்குவரத்து மாற்றுகள் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதற்காக, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை தாங்கள் தயாரித்து, அதை மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.