

புணேவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,470 போதை மாத்திரைகளை கோவை உக்கடம் அருகே பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை உக்கடம் போலீசார் சுங்கம் புறவழிச் சாலை மின்சார வாரிய அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர், அதில் அவர் கோவை புதூரைச் சேர்ந்த முகமது தாரிக் என்பதும், அவர் போதை மாத்திரை விற்பனை செய்வதும் தெரிய வந்தது. உடனே போலீசார் அந்த நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1,470 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மராட்டிரம் மாநிலம் புணேவில் உள்ள மருந்து கடையில் குறைந்த விலைக்கு போதை மாத்திரைகளை வாங்கி கோவை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
முகமது தாரிக் மீது ஏற்கனவே கஞ்சா போதைப் பொருட்கள் விற்றது உள்ளிட்ட நான்கு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் முகமது தாரிக்கை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
அதேபோன்று பெங்களூருவில் இருந்து கோவைக்கு மெத்தப்பேட்டை என்ற உயர்ரக போதை பொருள் கடத்தப்படுவதாக மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் கவுண்டம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் மாட்டுபட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பதும் அவர் பெங்களூருவில் இருந்து மெத்தப்பேட்டை கடத்தி வந்து கோவையில் உள்ள இளைஞர்கள் மற்றும் ஐ.டி ஊழியர்களுக்கு ஒரு கிராம் ரூ. 3,500-க்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்து ரமேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 கிராம் மெத்தப்பேட்டை 2 விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.