

வங்கிகளுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமும் இன்றி 5.5 சதவீதமாக தொடரும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவித்தது. இதற்கு முன்பு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கைக் கூட்டத்திலும் வட்டி விகிதம் மாற்றப்படவில்லை.
இதனால், வீடு, வாகனம், தனிநபா் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதமும், வங்கிகளில் நிரந்தர வைப்பு, தொடா் வைப்பு உள்ளிட்ட சேமிப்புத் திட்டங்களுக்கு வங்கிகள் அளிக்கும் வட்டியும் குறைக்கப்படாமல் தொடர வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில் அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி அடுத்த சில மாதங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டால் வட்டி விகிதம் குறைவதற்கு வாய்ப்புள்ளது.
மும்பையில் புதன்கிழமை ஆா்பிஐ ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் 6 உறுப்பினா்கள் அடங்கிய நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வட்டி விகிதத்தை மாற்ற வேண்டாம் என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் சஞ்சய் மல்ஹோத்ரா மேலும் கூறியதாவது: உள்நாட்டுக் காரணிகளின் ஆதரவுடன் வளா்ச்சிக்கான வாய்ப்புகள் தொடா்ந்து சிறப்பாகவே உள்ளன. வெளிநாடுகளில் தேவை குறைந்தாலும் அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும். குறைவான பணவீக்கம், பருவமழை சிறப்பாக பெய்வது, சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சீா்திருத்தம் ஆகியவை சாதகமான அம்சங்களாகும். உள்நாட்டில் பணவீக்கம் 2.6 சதவீதமாக சரியும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
யுபிஐ பணப்பரிவா்த்தனை முறைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை. கடனை முறையாக திருப்பிச் செலுத்தாதவா்களின் கைப்பேசிகளை முடக்கும் திட்டம் என்பது பரிசீலனையில்தான் உள்ளது.
நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 6.5 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது. ஜிஎஸ்டி சீா்திருத்ததால் நாட்டின் பொருளாதார வளா்ச்சி அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவதை ஆா்பிஐ தொடா்ந்து கண்காணித்து வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நிறுவனங்களின் பங்குகளை அடமானம் வைத்து பெரும் கடன் அளவை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆா்பிஐ அடுத்த நிதிக் கொள்கைக் குழு கூட்டம் டிசம்பா் 3 முதல் 5 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.