
கோவை: கோவையில் உள்ள செளடேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற கத்தி போடும் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோவை, ராஜவீதியில் அமைந்துள்ளது ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நடப்பு ஆண்டும் நவராத்திரி விழா சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
நவராத்திரி விழாவின் நிறைவு நாளையொட்டி தேவாங்க சமூகத்தைச் சோ்ந்த இளைஞா்கள் ராமலிங்க செளடேஸ்வரி அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பூமார்க்கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் இருந்து செளடேஸ்வரி அம்மன் கோயிலுக்கு பக்தா்கள் ஊா்வலமாக வந்தனா்.
அப்போது, ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் வேசுக்கோ, தீசுக்கோ என்று கூறியவாறு உடலில் கத்தியால் அடித்துக் கொண்டு நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்த நோ்த்திடக்கடன் செய்வதன் மூலம் நினைத்த காரியம் நிறைவேறும் என்பதும் ஐதீகம்.
பக்தர்களின் உடலில் ஏற்பட்ட வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். இந்தப் திருமஞ்சன பொடியை வைத்தால் மூன்று நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தொடா்ந்து கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.