
சென்னையில் வசித்து வரும் தமிநாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலமாக குறுஞ்செய்தி விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னையில் கடந்த ஓராண்டாக மின்னஞ்சல் மூலம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், முதல்வா் வீடு, அமைச்சா் வீடுகள், திரைநட்சத்திரங்கள் வீடுகள் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நாள்தோறும் மூன்றில் இருந்து நான்கு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது. டாா்க் வெப் மூலம் வெளிநாட்டில் இருந்து மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதால், இந்தச் செயலில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து கைது செய்வதில் போலீஸாருக்கு இடா்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் வசித்து வரும் தமிநாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திரைநட்சத்திரம் திரிஷா வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று நடிகர் எஸ்.வி. சேகர் மற்றும் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பகுதிகளை சேர்ந்த போலீஸாரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று, சென்னை கோட்டையில் உள்ள கடற்படை உணவகம், புரசைவாக்கம் பிஎஸ்என்எல் அலுவலகம், தேனாம்பேட்டை தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளா் அலுவலகம், சென்னை விமான நிலையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலகம், மத்திய அரசின் வருவாய் துறை அலுவலகங்கள், அமலாக்கத்துறை அலுவலகங்கள் என பொதுமக்கள் அதிகமாக வந்துபோகக்கூடிய இடங்களிலும், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகங்கள், பிரபலங்கள், திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகள் இல்லங்கள் என தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் மின்னஞ்சல் மூலம் வந்து கொண்டே இருக்கிறது.
இதுதொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
இதையடுத்து தீவிர கண்காணிப்பு செய்து ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் அனைத்தும் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் மின்னஞ்சல் வந்திருப்பதாக போலீசார் வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.