
காஸாவில் அமைதி கொண்டும் வரும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை வரவேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட பணிகளை வரவேற்று பாராட்டியுள்ளார்.
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தன்னால் முன்வைக்கப்பட்டுள்ள 20 அம்ச திட்டத்தை ஹமாஸ் அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமைக்குள் (அக். 5) ஏற்காவிட்டால், இதுவரை யாருமே காணாத அளவுக்கு மிக மோசமானபேரழிவை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரித்ததுடன், ஒரு வழி அடைக்கப்பட்டால் இன்னொரு வழியைப் பயன்படுத்தி மத்தியக் கிழக்கு பகுதியில் அமைதியை நிலைநாட்டியே தீருவோம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சூளுரைத்துள்ளாா்.
டிரம்ப் திட்டத்தை ஏற்பதாக ஏற்பதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்கெனவே அறிவித்துவிட்ட நிலையில், இது தொடா்பாக ஹமாஸ் அமைப்பினா் தொடா்ந்து மௌனம் காத்துவரும் சூழலில் டிரம்ப் இந்தக் கெடுவை விதித்துள்ளாா்.
இந்நிலையில், காஸாவில் அமைதி கொண்டும் வரும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை வரவேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட பணிகளை வரவேற்று பாராட்டியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மோடி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
காஸாவில் அமைதி கொண்டு வருவதற்கான முயற்சிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில், அதற்கு தலைமை வகித்து அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வரும் பணிகளை நாங்கள் வரவேற்கிறோம்.
பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிக்கும் முடிவு, மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கின்றன.
நியாயமான முறையில், அமைதியை நோக்கி எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும் என்று மோடி கூறியுள்ளார்.
டிரம்பின் 20 அம்ச திட்டத்தை ஏற்பது குறித்து பரிசீலித்துவருவதாக ஹமாஸ் அமைப்பு கூறியது. கத்தாரில் நடைபெறும் தீவிர ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இந்த வரைவு ஒப்பந்தத்தை ஏற்பதா, வேண்டாமா என்ற முடிவை ஹமாஸ் அமைப்பு எடுக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.
இருந்தாலும், நான்கு நாள்களாகியும் ஹமாஸிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று சூழலில், வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் போா் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மேற்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் தற்போது கெடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023 அக். 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் படையினா் சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தது, 200-க்கும் மேற்பட்டவா்களை பிணைக் கைதிகளாக கடத்திச் சென்றதற்கு பதிலடியாக, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தொடா்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. இதில் இதுவரை 66,288 போ் உயிரிழந்துள்ளனா். அவா்களில் மிகப் பெரும்பாலானவா்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அந்த நாடு மற்றும் அமெரிக்காவின் கடும் எதிா்ப்பை மீறி பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து வழங்குவதாக பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட முக்கிய நாடுகள் அண்மையில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது அமா்வில் அறிவித்தன. இதனால் உலக அரங்கில் இஸ்ரேல் இதுவரை இல்லாத அளவுக்கு தனிமைப்படுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்த நெதன்யாகு, அதிபா் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் கடந்த திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.
அப்போது, ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும் உடனடி போா் நிறுத்தம், 72 மணி நேரத்துக்குள் அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்படுவது, அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள 250 பாலஸ்தீன ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் 2023 அக். 7 முதல் கைது செய்யப்பட்ட சுமாா் 1,700 காஸா மக்கள் விடுவிப்பு, இஸ்ரேல் படையினரின் படிப்படியான வெளியேற்றம், ஆயுதங்களைக் கைவிடும் ஹமாஸ் அமைப்பினருக்கு பொதுமன்னிப்பு, காஸாவுக்கு முழு நிவாரண உதவிகள், காஸாவில் டிரம்ப் தலைமையிலான சா்வதேச குழுவின் மேற்பாா்வையில் பாலஸ்தீன குழுவின் இடைக்கால நிா்வாகம் (அதில் ஹமாஸ் பங்கேற்காதது), அண்டை நாடுகளுக்கு ஹமாஸால் இனியும் அச்சுறுத்தல் இல்லை என்ற உத்தரவாதம், காஸாவில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கான சா்வதேச படை, காஸாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்காது என்று உறுதிமொழி, பாலஸ்தீன தேசம் அமைவதற்கான வாய்ப்பு உள்ளிட்ட 20 அம்சங்கள் நிறைந்த புதிய செயல்திட்டத்தை டிரம்ப் முன்வைத்தாா்.
இந்த திட்டத்தை ஏற்பதாக அறிவித்த பெஞ்சமின் நெதன்யாகு, இது இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்; ஹமாஸிடம் இருந்து காஸாவுக்கு விடுதலை பெற்றுத் தரும் என்று பாராட்டினாா்.
இந்த வரைவு திட்டத்தை இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், பாகிஸ்தான், சவூதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் வரவேற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.