
புதுதில்லி: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பொருளாதார கொள்கைகள் அவரது சில தொழிலதிபர் நண்பர்களின் நலன்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
இந்தியா தற்போது கோடீஸ்வரா்களின் புதிய முனையமாக உருவெடுத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டு பணக்காரா்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாட்டில் ஓரிடத்தில் சொத்து குவிந்து வருவதை அடுத்தடுத்து வெளியாகும் ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன.
1,687 பேரிடம் மட்டுமே குவிந்துள்ள செல்வம்
லட்சக்கணக்கான இந்தியா்கள் தங்களின் அன்றாடத் தேவைகளை பூா்த்தி செய்வதற்கே போராடி வரும் நிலையில், நாட்டின் பாதி செல்வத்தை வெறும் 1,687 பேரிடம் மட்டுமே உள்ளது.
சமூக பாதுகாப்பின்மை மற்றும் அதிருப்தி
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, இந்த மிகப்பெரிய அளவில் ஒரு சிலரிடம் மட்டும் சொத்துகள் குவிந்து வருகின்றன. இது நாட்டில், மிகப்பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வை உருவாக்கி வருகிறது. இந்த ஏற்றத்தாழ்வு பரவலான சமூக பாதுகாப்பின்மை மற்றும் அதிருப்தியை உருவாக்கி வருகிறது.
அரசியல் அராஜகத்துக்கு வழிவகுக்கும்
இத்தகைய தீவிர பொருளாதார சமத்துவமின்மையும், ஜனநாயக அமைப்புகள் முடக்கப்படுவதும் அரசியல் அராஜகத்துக்கு வழிவகுக்கும் என்பதை, பிற நாடுகளில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் காட்டுகின்றன. மோடி அரசும் நாட்டை அதே நிலைக்குத்தான் தள்ளுகிறது.
தொழிலதிபர் நண்பர்களின் நலன்களில் மட்டுமே கவனம்
அதிகார பலம் காரணமாக ஒரு சில தொழிலதிபர்கள் மட்டுமே மேலும் மேலும் பணக்காரர்களாகி வருகின்றனர். பிரதமர் மோடியின் கொள்கைகள் அவரது சில தொழிலதிபர் நண்பர்களின் நலன்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளியுறவு கொள்கைகளில் தோல்வி
இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள் துறை, முன்னெப்போதும் இல்லாத அளவிலான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்த பாதிப்புகளுக்கு மத்திய அரசின் பொருளாதார வளா்ச்சிக்கான உள்நாட்டு மற்றும் வெளியுறவு கொள்கைகளின் தோல்வியே காரணமாகும்.
பலவீனமடையும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்
சாதாரண மக்களுக்கான வருவாய் வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. சம்பாதிக்கும் மக்களுக்குக் கூட சேமிப்பைவிட கடன் சுமை அதிகரிக்கும் அளவுக்கு பணவீக்கம் அதிகரித்து வருகிறது. கல்வி மற்றும் சுகாராத்தில் முதலீடுகள் படிப்படியாகக் குறைந்து வருவதோடு, மேலும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் பலவீனமடைந்து வருகின்றன.
லட்சக்கணக்கான மக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை வழங்கிய வெற்றிகரமான திட்டங்கள் எல்லாம் இப்போது ஊதிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் கூட கிடைப்பதில்லை.
ஜனநாயகத்தின் ஆன்மா மீதான நேரடித் தாக்குதல்
அந்த வகையில், மிகப் பெரிய அளவில் ஓரிடத்தில் சொத்துகள் குவிந்து வருவது, நாட்டின் பொருளாதாரத்திற்கான பிரச்னை மட்டுமல்ல, ஜனநாயகத்தின் ஆன்மா மீதான நேரடித் தாக்குதலாகும். இவ்வாறு, பொருளாதார சக்தி ஒரு சிலர்களிடம் மட்டும் குவியும்போது, அரசியல் முடிவுகளும் அவா்களுக்கு சாதமாகவே அமையும். இது, வளர்ந்து வரும் சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மையை மேலும் அதிகரிக்கும். இதன் விளைவாக, கோடிக்கணக்கான மக்கள் ஜனநாயகம் மற்றும் வளர்ச்சியின் செயல்முறைகளில் இருந்து படிப்படியாக விலக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் வெளியான 2025-ஆம் ஆண்டுக்கான 'எம்3எம் ஹுருன்' இந்திய பணக்காரா்கள் பட்டியலில், 9.55 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி முதல் இடத்தையும், 8.14 லட்சம் கோடியுடன் கெளதம் அதானி இரண்டாம் இடத்தையும், ஹெச்.சி.எல். நிறுவனத்தின் ரோஷிணி நாடாா் மல்ஹோத்ரா, சைரஸ் பூனாவாலா, குமாா் மங்கலம் பிா்லா ஆகியோா் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனா்.
மேலும், ரூ.1,000 கோடி சொத்து மதிப்புடன் 1,687 போ் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனா். இவா்களில் 148 போ் புதிய செல்வந்தவா்கள்.
இந்தியாவில் கடந்த இரு ஆண்டுகளில் வாரத்துக்கு ஒரு கோடீஸ்வரா் உருவாகுவதாகவும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றவா்கள் ஒவ்வொரு நாளும் ரூ.1,991 கோடி சொத்துகளை உருவாக்குவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.