நாகமலை குன்று 4-வது உயிரியல் பாரம்பரிய தளமாக அறிவிப்பு

நாகமலை குன்றினை தமிழகத்தின் நான்காவது உயிரியல் பாரம்பரிய தளமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது தொடர்பாக...
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

ஈரோடு மாவட்டம், நாகமலை குன்றினை தமிழகத்தின் நான்காவது உயிரியல் பாரம்பரிய தளமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு, உயிரியல் பன்மைச் சட்டம் 2002, பிரிவு 37(1)ன் கீழ், அரிட்டாபட்டியை நவம்பர் 2022 இல் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது, காசம்பட்டி மார்ச் 2025 இல் அறிவிக்கப்பட்டது மற்றும் எலத்தூர் ஏரி செப்டம்பர் 2025-ல் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 32.22.50 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட ஈரோடு மாவட்டத்திலுள்ள நாகமலை குன்றினை மாநிலத்தின் நான்காவது உயிரியல் பாரம்பரியத் தளமாக அறிவித்துள்ளது.

பல முன்னோடி முயற்சிகள் மூலம் பல்லுயிர்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளைத் தமிழ்நாடு தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. 20 ராம்சார்

தளங்களுடன், நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தளங்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. மேலும், அழிந்து வரும் உயிரினங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பாதுகாப்பு நிதியினை அமைத்துள்ளதுடன், சூழலியல் உணர்திறன் மிக்கப் பகுதிகளைப் பாதுகாக்க நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

நாகமலை குன்று நான்காவது பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது, தமிழ்நாட்டின் பல்லுயிர் பாதுகாப்புப் பயணத்தில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது.

பல்லுயிர் பாரம்பரியத் தளங்கள் என்பவை, தனித்துவமான மற்றும் நலிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை ஆதரிக்கும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகும். இவை அரிய, அச்சுறுத்தலுக்கு உள்ளான மற்றும் முக்கிய நலிந்த இனங்களைப் பாதுகாக்கின்றன, பரிணாம முக்கியத்துவத்தைப் பேணிப் பாதுகாக்கின்றன, இவை இயற்கையுடனான கலாசாரப் பிணைப்புகளை வலுப்படுத்துகின்றன. ஒரு பகுதிக்கு பல்லுயிர் பாரம்பரிய தள அங்கீகாரம் கிடைப்பது உள்ளூர் சமூகங்களுக்கு பெருமையை அளிக்கிறது, பாதுகாப்புக் கொள்கைகளை பலப்படுத்துகிறது, மேலும் பாரம்பரிய வாழ்வாதாரங்கள் சூழலியல் நிலைத்தன்மையுடன் செழிக்கின்றன என்பதை உறுதி செய்கிறது.

முக்கியமாக, பல்லுயிர் பாரம்பரியத் தளம் அந்தஸ்து உள்ளூர் சமூகங்களின் பாரம்பரிய நடைமுறைகளையோ அல்லது வழக்கமான பயன்பாட்டை கட்டுப்படுத்தாது. மாறாக, இது சூழலியல் சமநிலையை மேம்படுத்துகிறது மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது.

நாகமலை குன்று ஒரு சூழலியல் வளமிக்க இடமாகவும் மற்றும் இடம்பெயர்ந்து வரும் மற்றும் உள்ளூர் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள், மற்றும் பல்வேறு ஈரநில சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஒரு முக்கிய வாழ்விடமாகவும் உள்ளது. அதன் நிலப்பரப்பில் உள்ள ஆழமான நீர்நிலைகள், ஆழமற்ற ஓரங்கள், சேற்று நிலங்கள் (மட்பிளாட்கள்) மற்றும் பாறைப் பகுதிகள் ஆகியவை வளமான பல்லுயிர்களை ஆதரிக்கின்றன. தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு (2024) நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, இங்கே 138 தாவர இனங்கள், 118 பறவை இனங்கள் (30 இடம்பெயரும் மற்றும் 88 உள்ளூர்), 7 பாலூட்டிகள், 11 ஊர்வனங்கள், 5 சிலந்திகள் மற்றும் 71 பூச்சியினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.

இங்குள்ள முக்கிய உயிரினங்களில் பெரிய புள்ளிகள் கொண்ட கழுகு, வெளிறிய பூனைப் பருந்து மற்றும் பென்னெல்லிஸ் கழுகு ஆகியவை அடங்கும்.

தாவரங்களைப் பொறுத்தவரை, 48 இனங்கள் மற்றும் 114 பேரினங்களின் கீழ் வரும் 138 தாவர இனங்கள் உள்ளன. இதில் 125 இருவித்திலைத் தாவரங்கள் மற்றும் 13 ஒருவித்திலைத் தாவரங்கள் அடங்கும்.

நாகமலை குன்று அதன் சூழலியல் மதிப்புடன் மட்டுமல்லாமல், குறிப்பிடத்தக்க தொல்லியல் மற்றும் கலாசார முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. இரும்புக் காலத்தைச் சேர்ந்த கற்குவை வட்டங்கள், பாறை மறைவிடங்கள், மற்றும் பழங்கால முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருட்கள் ஆகியவற்றின் சான்றுகள் அதன் வரலாற்று ஆழத்தை எடுத்துக்காட்டுகின்றன. தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் சுவாமி கல்வெட்டு ஒன்று அதன் கலாச்சாரப் பாரம்பரியத்தை வலியுறுத்துகிறது.

எலத்தூர் பேரூராட்சி ஜன.22 இல் இந்த அறிவிப்புக்கு ஆதரவாக தீர்மானத்தை நிறைவேற்றியது. இது உள்ளூர் பாதுகாப்புக் கொள்கைகள் வலுவாக இருப்பதைக் காட்டுகிறது. மாவட்ட ஆட்சியரும் 28.1.2025 தேதியிட்ட கடிதம் மூலம் இந்த அறிவிப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் தளத்தைப் பாதுகாப்பது, சூழலியல் நன்மைகளைப் பாதுகாப்பதுடன், சுற்றுச்சூழல் அமைப்புடன் பிணைந்துள்ள கலாசார மரபுகளையும் மற்றும் பாரம்பரிய விழுமியங்களையும் நிலைநிறுத்துகிறது.

இதனால், நாகமலை குன்றைப் பல்லுயிர் பாரம்பரியத் தளமாக அறிவிப்பதன் மூலம், தமிழ்நாடு தனது பாதுகாப்பு மற்றும் நிலையான பாரம்பரிய நிர்வாகத்தில் உள்ள தலைமையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம், இந்த நிலப்பரப்பின் பல்லுயிர், சூழலியல் பங்கு மற்றும் கலாசார முக்கியத்துவம் ஆகியவை வருங்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Environment, Climate Change & Forests Dept declares PR-Nagamalai Hill as Tamil Nadu's 4th biological heritage site

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com