
போபால்: மத்தியப் பிரதேசத்தில் சா்ச்சைக்குரிய இருமல் மருந்தை உட்கொண்டதால் 22 குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், மருத்துவர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டதற்கு எதிராகவும், "உண்மையான குற்றவாளிகள்" மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மத்தியப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.
சா்ச்சைக்குரிய இருமல் மருந்தில் நச்சு ரசாயனம் இருப்பதாக மருத்துவர்கள் குற்றம்சாட்டினர், மேலும் கலப்பட மருந்து உற்பத்தியாளர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரினர்.
மருத்துவர் சோனி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவர்கள் அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 8,500 அரசு மருத்துவர்கள், மருத்துவத் துறை ஊழியர்கள், தங்கள் கைகளில் கருப்பு நாடாவைக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் வெள்ளிக்கிழமை தங்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டனர்.
சா்ச்சைக்குரிய இருமல் மருந்தான கோல்ட்ரிஃப்பை உட்கொண்ட குழந்தைகள் மரணம் தொடர்பாக அலட்சியமாக இருந்ததாகக் கூறி சிந்த்வாராவைச் சேர்ந்த மருத்துவர் பிரவீன் சோனியை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கோல்ட்ரிஃப் இருமல் மருந்து உட்கொண்டதால் இறந்த குழந்தைகளுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய மருத்துவர்கள் சங்க தலைவர் மருத்துவர் ராகேஷ் மாளவியா, பொதுச் செயலாளர் டாக்டர் அசோக் தாக்கூர் மற்றும் பிற மருத்துவர்கள், மருத்துவர் சோனி பழங்குடியினப் பகுதியில் உள்ள ஏழை மக்களின் நிதி நிலைமையை மனதில் கொண்டு, குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய இருமல் மருந்த அவர்களுக்கு பரிந்துரைத்தார். இந்த இருமல் மருந்து மத்தியப் பிரதேசத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பரிந்துரைக்கப்படுகிறது என்று அவர்கள் கூறினர்.
மேலும், "மாநிலத்தில் அந்த மருந்து விநியோகம் மற்றும் விற்பனைக்கு முன்பு அதிகாரிகள் அதனை சரிபார்த்திருக்க வேண்டும். இந்த விவகாரத்தில்
உணவு மற்றும் மருந்து நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது? அவர்கள் மீது வழக்குத் தொடுப்பதற்குப் பதிலாக, இந்த விவகாரத்தில் ஒரு மருத்துவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவர் சோனியின் கைது சட்டவிரோதமானது என்றும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது. மேலும், இந்த கைது உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் என்றும், ஒரு மருத்துவர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறினர்.
"கலப்படம் கலந்த மருந்தை தயாரிப்பதில் அல்லது அதன் விநியோகத்தில் ஈடுபடாத மருத்துவரை கைது செய்துள்ளதற்கு பதிலாக, அத்தகைய மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ள நியமிக்கப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்."
இதுபோன்ற நச்சு ரசாயனம் கலந்த மருந்துகளை தயாரித்து குழந்தைகளின் உயிருடன் விளையாடும் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்க ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்.
மருந்து விநியோகத்தில் ஊழல் நடப்பதை பொறுத்துக்கொள்ளக்கூடாது என்றும், 22 குழந்தைகள் இறப்புகள் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரினர்.
மேலும், "மருத்துவர் சோனி மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதால் மருத்துவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று யாரோ செய்யும் தவறுகளால் மக்கள் மருத்துவர்கள் மீதான நம்பிக்கையை இழக்கிறார்கள்.
இதுபோன்ற செயல்கள் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களின் மன உறுதியைக் குறைக்கிறது" என்று மருத்துவர்கள் மாளவியா மற்றும் தாக்கூர் ஆகியோர் கூறினர்.
மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்ட மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் மாநிலங்களிலும் குழந்தைகள் உயிரிழந்தன. இதில் 3 மாநிலங்களிலும் புதன்கிழமை வரை மொத்தம் 22 குழந்தைகள் உயிரிழந்தன. இவர்களில் பெரும்பாலானவர்கள் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், இரண்டு பேர் பெதுல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் பந்தூர்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த 1-ஆம் தேதி கோல்ட்ரிஃப் இருமல் மருந்தால் குழந்தைகள் இறப்பு நிகழ்ந்தவுடன், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அந்த மருந்தை ஆய்வுக்கு உட்படுத்தியது. அதில் டைஎத்திலீன் கிளைகால் ரசாயனத்தின் அளவு 48 சதவீதம் இருப்பது கண்டறியப்பட்டதுடன் உடனடியாக தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் "தரமற்ற மருந்து" என்று அறிவித்தது.
இதுகுறித்து மத்தியப் பிரதேச அரசுக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. ஆனால், மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த சுகாதார அலுவலா்களும், மத்திய அரசின் அலுவலா்களும் அது நல்ல மருந்து என்று குறிப்பிட்டனா். இருந்தாலும், தமிழக அரசுதான் அதில் நச்சுத்தன்மை அதிகம் உள்ளது என்பதை கண்டுபிடித்தது. மற்ற மாநிலங்களிலும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று ஒடிஸா மற்றும் புதுவை மாநிலங்களுக்கும் அதுதொடா்பான தகவல்கள் அனுப்பப்பட்டன.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச அரசு கடந்த சனிக்கிழமை மாநிலம் முழுவதும் கோல்ட்ரிஃப் இருமல் மருந்து விற்பனையைத் தடை செய்தது.
இந்நிலையில், குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் கோல்ட்ரிப் நிறுவனத்தின் உரிமையாளா் ஜி. ரங்கநாதனை (75) மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் சென்னை கோடம்பாக்கம், நாகாா்ஜூனா நகா், 2-ஆவது தெருவில் உள்ள அவரது வீட்டில் வைத்து வியாழக்கிழமை(அக்.9) அதிகாலை கைது செய்தனா்.
பின்னா், அவரை சுங்குவாா்சத்திரம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனா். விசாரணைக்கு பின்னா் அவரை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அதிகாரிகள் ஆஜா்படுத்தி, டிரான்ஸிஸ்ட் வாரண்டுக்காக மனு தாக்கல் செய்தனா். மனுவை விசாரித்த நீதிமன்றம், ரங்கநாதனை மத்தியப் பிரதேசம் அழைத்துச் செல்ல டிரான்ஸிஸ்ட் வாரண்ட் வழங்கி உத்தரவிட்டது.
முன்னதாக விசாரணையின்போது ரங்கநாதன் கொடுத்த தகவலின் பேரில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த அந்த மருந்து உற்பத்தி நிறுவன மேலாளா் உள்பட மேலும் இருவரையும் கைது செய்து வழக்குத் தொடா்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை செய்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.