
தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற 12,480 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்தில், 2025-26 ஆம் ஆண்டின் பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சிகளில் கிராம வளர்ச்சி திட்டம் தயார் செய்து பணிகளை மேற்கொள்ள கிராம சபையின் ஒப்புதல் உள்ளிட்ட மொத்தம் 16 முக்கிய தீர்மானங்கள் கிராம சபைகளில் நிறைவேற்றப்பட்டன.
கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான மூன்று அத்தியாவசிய தேவைகள் தேர்வு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டன.
கிராமப்புற மக்கள் தங்களின் உரிமைகளை அறிந்திடவும், தங்களின் தேவைகளை கோரி பெறுவதற்காகவும், ஒவ்வொரு ஆண்டும், தமிழ்நாட்டில் ஆறு முறை கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. மேலும், சில நேரங்களில் சிறப்பு கிராம சபை கூட்டங்களும் நடத்தப்படும்.
அதன்படி, ஜனவரி 26, மார்ச் 22, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகிறது.
தமிழ்நாட்டின் ஊரக உள்ளாட்சிகளில் மிக முக்கிய ஜனநாயக நிகழ்வாகக் கருதப்படும் கிராம சபைக் கூட்டங்கள், மாநிலம் முழுவதும் உள்ள 12,480 ஊராட்சிகளில் சனிக்கிழமை (அக்.11) காலை 11 மணியளவில் சிறப்பாக நடைபெற்றன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்திலிருந்து காணொலி வாயிலாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது, கிராம சபைகள் மக்களாட்சியின் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது என வலியுறுத்தி, மக்களின் தேவைகள், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி ஊரக வளர்ச்சி திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில், செங்கல்பட்டு மாவட்டம் – கோவளம் ஊராட்சி, தென்காசி மாவட்டம் – முள்ளிக்குளம் ஊராட்சி, ஆகிய ஊராட்சிகளைச் சார்ந்த ஊராட்சி
மன்றத்தலைவர்களும், கோயமுத்தூர் மாவட்டம் – வாரப்பட்டி ஊராட்சி, விழுப்புரம் மாவட்டம் – கொண்டாங்கி ஊராட்சி, மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் –
திருமலை சமுத்திரம் ஊராட்சி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களும் முதல்வருடன் கலந்துரையாடினர்.
இக்கூட்டங்களில், மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான மூன்று அத்தியாவசிய தேவைகள் தேர்வு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டன. மேலும், சமூக நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு, இழிவுபடுத்தும் பொருள் தரும் சாதிப்பெயர்கள் கொண்ட குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள்,
நீர்நிலைகள் மற்றும் பிற பொது இடங்களில் காணப்படும் பெயர்களை நீக்கி, புதிய பொருத்தமான பெயர்களைச் சூட்டுதல் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
‘தாயுமானவர் திட்டம்’ கீழ் பயனாளிகளை அடையாளம் கண்டு, நலிவு நிலை குறைப்புத் திட்டம் தயாரித்து ஒப்புதல் பெறப்பட்டது.
மேலும் இக்கிராம சபை கூட்டத்தில்,
* “நம்ம ஊரு, நம்ம அரசு” என்ற தலைப்பின் கீழ் கண்டறியப்பட்ட திட்டங்கள் தேவைகள் பதிவேற்றம் செய்யப்பட்டு விரைந்து நடவடிக்கை எடுப்பது குறித்து,
*கிராம ஊராட்சிகளில் 1.4.2025 முதல் 30.9.2025 முடியவுள்ள காலத்திற்கு நிர்வாகம் மற்றும் பொது நிதிச்செலவினம்,
* கிராம ஊராட்சியின் 2024-25 ஆம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கை,
*மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் வரவு மற்றும் பணி முன்னேற்றம்,
*அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம்,
*தூய்மை பாரத இயக்க (ஊரகம்) (SBM (G) 2.0) திட்டம்,
*ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்,
*கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும்,
*வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும்,
*அனைத்து வகையான தொழில்களில் குழந்தைகளும் மற்றும் அபாயகரமான தொழில்களில் வளரிளம் பருவத்தினரும் இல்லை என்பது குறித்து நடவடிக்கைகள்,
*தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் (DDU-GKY -RSETI Training) (கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டம்) குறித்தும்,
*தேர்வு செய்யப்பட்டுள்ள 7,515 கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை குறித்த விடியோ, ஆடியோ பதிவுகளை சபாசார் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது,
*2025-26 ஆம் ஆண்டின் பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சிகளில் கிராம வளர்ச்சி திட்டம் தயார் செய்து பணிகளை மேற்கொள்ள கிராம சபையின் ஒப்புதல் உள்ளிட்ட மொத்தம் 16 முக்கிய தீர்மானங்கள் கிராம சபைகளில் நிறைவேற்றப்பட்டன.
மாநிலம் முழுவதும் நடைபெற்ற இக்கிராம சபைக் கூட்டங்கள், மக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் மற்றும் ஊரக வளர்ச்சியை வலுப்படுத்தும் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தன.
இக்கிராம சபைக் கூட்டங்களில் மாவட்டங்களிலிருந்து அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முதல்வரின் காணொலி உரை நிகழ்வில், முகாம் அலுவலகத்திலிருந்து தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை நிர்வாக இயக்குநர் பெ.ரமண சரஸ்வதி, தலைமைச் செயலகத்திலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பா.பொன்னையா மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.