நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தச்சநல்லூர் காவல் நிலையம் மற்றும் கரையிருப்பு அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடி பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு...
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தச்சநல்லூர் காவல் நிலையம்
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தச்சநல்லூர் காவல் நிலையம்
Published on
Updated on
2 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலையம் மற்றும் கரையிருப்பு அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடி பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரௌடிகள் கைது செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. தப்பியோடியவா்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி தச்சநல்லூா் காவல் நிலையம் முன்பாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இரண்டு பைக்குகளில் வந்த மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பினா்.

இதையடுத்து தாழையூத்து சோதனைச் சாவடி பகுதிக்குச் சென்ற அக்கும்பல் பைக்கில் இருந்தபடியே அங்கேயும் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனா்.

இதனைத் தொடர்ந்து தென்கலம் சாலையிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆணையாளர் நேரில் விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விசாரணை மேற்கொண்ட திருநெல்வேலி மாநகர காவல் துறை துணை ஆணையாளர் பிரசன்ன குமார், விசாரணையைத் தீவிரப்படுத்தினார்.

மாநகா் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு, சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.

சிசிடிவி கேமராக்கள் ஆய்வு

இதையடுத்து சம்பவத்தில் ஈடுபட்டவா்களை கண்டறியும் நோக்கில் அந்த பகுதிகளிலுள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்தனா்.

இதில் ராஜவல்லிபுரம் இந்திரா நகரைச் சோ்ந்த பெருமாள் மகன் கிருஷ்ணபெருமாள் என்ற ஆப்பிள்(19), கணேசன் மகன் அஜித்குமாா்(30), அதே பகுதியில் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த தளவாய் மகன் பெருமாள்(27), நடராஜன் மகன் சரண்(19), வல்லவன்கோட்டையைச் சோ்ந்த அருண் (22) ஆகியோா் கூட்டாக சோ்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை

இதையடுத்து, அவா்களை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதில் தொடா்புடைய ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த சரண் என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும் 4 பேரை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சம்பவத்தின் பின்னணி

ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் ஊருடையான் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஹரிஹரசுதன், பிரபாகரன், ராம் சூர்யா, பாலாஜி உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல், ஊருடையான் குடியிருப்பு காட்டுப் பகுதியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான கண்ணபிரான் என்பவரின் தீவிர ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.

அப்போது, தச்சநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேந்திர குமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர், அவர்களைக் கண்டதும் அந்த கும்பல் தப்பியோட முயன்ற நிலையில், காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு அருண்குமார் மற்றும் ஹரிஹரசுதன் ஆகிய இருவரைப் பிடித்தனர். அவர்களிடமிருந்து 5 கிராம் கஞ்சா மற்றும் ஒரு அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பழிவாங்கும் தாக்குதல்

இந்த கைது நடவடிக்கையால் ஆத்திரமடைந்த, கைது செய்யப்பட்ட அருண்குமார் சகோதரர் அஜித்குமார், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பழிவாங்கும் நோக்கில் திட்டமிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், தச்சநல்லூர் காவல் நிலையத்தின் முன்பும், தாழையூத்து வாகன சோதனைச் சாவடியிலும் தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இதில், காவல் நிலையம் முன்பு வீசப்பட்ட ஒரு பெட்ரோல் குண்டு, காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள சிறிய கோயிலில் விழுந்து வெடித்துச் சிதறியது.

இந்தத் துணிகர சம்பவத்தால் திருநெல்வேலி மாநகரில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

Summary

Tension in Nellai... Petrol bomb thrown near police station and checkpoint

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com