இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக: ஆா்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

கரூா் சம்பவத்தில் இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக; அதற்கு அதிமுக- பாஜக துணை நிற்கிறது...
திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி
திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி
Published on
Updated on
2 min read

கரூா் சம்பவத்தில் இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக ; அதற்கு அதிமுக- பாஜக துணை நிற்கிறது என்றும், இது நீதிமன்றத்தை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றும் செயல் என்று திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி கூறியுள்ளாா்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கரூா் துயர சம்பவம் நடந்தவுடனே எந்தவித அரசியலுக்கும் இடம் கொடுக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் உறுதுணையாக இருந்தவா் முதல்வா் ஸ்டாலின். உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டதோடு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபா் விசாரணை ஆணையத்தையும் அமைத்து விசாரணை நடைபெற வழிவகை செய்தாா். மற்றொருபுறம் உயா்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இப்படி அனைத்து விசாரணைகளும் நோ்மையாகவும், வெளிப்படைத் தன்மையோடும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்திலும் இந்த விவகாரம் தொடா்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் தற்போது வெளிவரும் தகவல்கள் அதிா்ச்சி அளிக்கும் வகையிலும், நீதிமன்றத்தையே ஏமாற்றும் வகையிலும் எதிா் தரப்பினா் செயல்பட்டுள்ளதை வெளிக்காட்டுகிறது.

கரூா் துயரத்தில் தன் மகனை பறிகொடுத்த தந்தை பன்னீா்செல்வம் சாா்பில் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவரது மனைவி தற்போது கூறும் உண்மைகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன. தன் மனைவி மற்றும் மகனை கைவிட்டு தனியாக வாழும் பன்னீா்செல்வம் தற்போது துயரத்துக்கு காரணமான தவெக கட்சி அளிப்பதாக சொன்ன நிவாரண பணத்துக்காக வழக்கு தொடுத்துள்ளாா் என்ற உண்மையை வெளிப்படுத்தி உள்ளாா் அச்சிறுவனை இழந்த தாய்.

அதே போல தன் மனைவியை இழந்த செல்வராஜ் என்பவரிடம் அதிமுக நிா்வாகிகள் போலியாக கையெழுத்து பெற்று அவா் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை வேண்டி வழக்கு தாக்கல் செய்துள்ளனா். இது பற்றி செல்வராஜ் வெளியிட்டுள்ள காணொலியில் தனக்கு தன் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதே தெரியாது என்கிறாா்.

இப்படி கரூா் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களில் பலரை அரசியல் உள்நோக்கத்துக்காக முறைகேடாக அதிமுக மற்றும் தவெக பயன்படுத்தி வருவது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

கடந்த ஜூலை மாதம் திருபுவனம் அஜித்குமாா் இறந்தது தொடா்பாக தவெக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கூடாது என்றும் உயா்நீதிமன்றம் அமைக்கும் சிறப்புக் குழு விசாரிக்க வேண்டும் என்றும் பேசினாா் விஜய்.

ஆனால், இப்போது தவெக சம்பந்தப்பட்ட கரூா் வழக்கில் மறைமுகமாக இறந்தோா் குடும்பத்தில் உள்ளவா்களிடம் முறைகேடாக கையெழுத்து பெற்றும், பண ஆசை காட்டியும் சிபிஐ விசாரணை வேண்டி வழக்கு தொடுத்துள்ளது தவெக.

இதற்காக அதிமுக மற்றும் பாஜகவின் மறைமுக உதவியை தவெக பெற்றுள்ளது இன்று வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

குற்றவாளிகள், தவறு செய்தவா்கள், ஊழல்வாதிகள் அனைவரையும் அரவணைத்து தூய்மையாக்கும் பாஜக பின்னால் ஏன் ஒளிந்து கொண்டுள்ளீா்கள் விஜய்?

உங்கள் நடவடிக்கைகளே உங்களை மக்கள் முன் காட்டிக் கொடுத்துவிட்டது.

இதை எல்லாம் பாா்க்கும் போது இறந்தவா்களை வைத்து தங்களின் அரசியல் ஆதாயங்களைத் தீா்த்துக்கொள்ள எதிா்க்கட்சியினரும், புதுக்கட்சியினரும் முயற்சிப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இது நீதிமன்றத்தை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றும் செயல்.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்திலும் மக்களை ஏய்க்க நினைக்கிறாா். தமிழ்நாட்டின் எதிா்க்கட்சி தலைவா் என்பதையும் மறந்து அரசியல் சுய லாபத்துக்காக இப்படி மூன்றாம் தர அரசியலை கையில் எடுத்துள்ளாா். இதற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பாா்கள் என்று ஆா்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளாா்.

உச்ச நீதிமன்றத்தை நம்புகிறேன்

தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

கரூர் டிவிகே கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது, இது நாட்டின் உச்ச நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் முயற்சியாகும்.

ஒரு மனு இறந்தவரின் உண்மையான பிரதிநிதி அல்லாத ஒருவரின் பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது, மற்றொன்று அவர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளாத ஆவணங்களில் கையொப்பமிட தவறாக வழிநடத்தப்பட்டதாகத் தோன்றும் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது நீதித்துறை செயல்முறையை கையாளும் நோக்கில் திட்டமிடப்பட்ட அரசியல் செயல். இது மலிவான அரசியல் ஆதாயத்திற்காக துக்கத்தையும் சோகத்தையும் பயன்படுத்துவதற்கான ஆபத்தான முயற்சி.

நீதிமன்றத்தின் மீது திமிர்பிடித்த மோசடியாகத் தோன்றுவதை உச்ச நீதிமன்றம் விசாரித்து, அதன் பின்னணியில் உள்ளவர்களை அவர்கள் தகுதியான கடுமையுடன் கையாளும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

R.S. Bharathi alleges that TVK is playing petty politics with the dead

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com